Saturday, 28 December 2013

உண்மை உங்களை வரவேற்கிறது 2


தொலைபேசியின் ஒலி கதறிக்கொண்டே இருந்தது. மொத்தம் நாற்பது அழைப்புகள். அனைத்தையும் அவள் நிராகரித்தாள். எடுக்கப்படாத தொலைபேசி மணி ஒலிக்கும் வீட்டில், நாம் நேசிக்கிறவர்கள் இருந்தால்... அவர்கள் மேல் மோதிய ஒலி, நம்மை வந்தடைந்து அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பதை சொல்லிவிடுகிறது.

யார் முக்கியம் என்ற என் கேள்விக்கு, அவள் தன் தோழிகள்தான் என்பதை செயலால் சொல்லிவிட்டாள். நான் இந்த கேள்வியை முன் வைக்கவில்லையென்றால் எங்கள் உறவுக்கு உத்திரவாதம் இருந்திருக்கும். அந்த உத்திரவாதம் பொய்யானதாகவே இருந்திருக்கும். எல்லோரும் தேவையானவர்களுக்கு, யாரும் தேவையில்லை என்பதே உண்மை.

உண்மையை நோக்கி காதலியை அழைத்துச் சென்றதால், நான் தோற்றேன். அவள் ஜெயித்தாள். காதல் இறந்து போனது.

நான் புகைப்படம் எடுப்பதை நிறுத்தினேன். குடித்துவிட்டு ரோடுகளில் கிடந்தேன். அதை அவள் தோழிகள் பார்த்து சிரித்துவிட்டு போனார்கள்.

என் நண்பன் ஷாஜி தலையில் அடித்துக் கொண்டான். "நீ ஏஜென்சி பக்கமே போகல. உன் வேலை போயாச்சி. மதறாஸ்லயிருந்து வந்து இங்க பிச்சை எடுக்கப் போறியா?"

நான் அமைதியாக இருந்தேன். அவனுக்கு கோபம் இன்னும் அதிகமானது. பிறகு அதுவே என் மீது அன்பாக மாறியது. தாழ்ந்த குரலில் சொன்னான். "நீ தெருவுல கிடந்ததை உன் காதலி பார்த்திருக்கிறாள். நீ அழிந்து போவதைப் பற்றி, அவள் துளி கூட கவலைப்படவில்லை. இனியும் நீ உன்னை அழித்துக் கொள்ள விரும்புறியா?"

எனக்கு குடிக்க வேண்டும் போலிருந்தது.

மதுபானக் கூடத்தில் 'நூறு ஆண்டுகளுக்கு முன்பே உன் மீது எனக்கு காதல்...' என்ற பாடல் ஹிந்தியில் ஒலித்துக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு பெண் ஆடிக்கொண்டிருந்தாள். நான் குடித்துக் கொண்டிருந்தேன். அவள் நடனம் ஆடிக் கொண்டே அடிக்கடி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை எனக்குத் தெரியும். அவள் நடிகையாவதற்காக பாம்பே வந்தவள். நான் எடுத்த புகைப்படங்கள் அவளை நடிகையாக்கியிருந்தது. ஏனோ தெரியவில்லை அவள் சினிமாவில் ஜொலிக்கவில்லை. மதுபானக் கூடத்தில் ஆடிக்கொண்டிருந்தாள்.

என் அருகே வந்த அவள், மெதுவாகச் சொன்னாள். "நீ தெருவில் கிடப்பதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். அது நீதான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு விலை உயர்ந்த கேமரா தெருவில் கிடப்பதாகவே நான் நம்புகிறேன்."

நான் அவளை ஒரு வினாடி கூர்ந்து பார்த்தேன். அவள் கண்களில் உண்மை இருந்தது. எதுவும் சொல்லாமல் எழுந்தேன். வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

அன்றைய இரவு, நான் ஒரு கனவு கண்டேன். அதில் நானும் என் காதலியும் பைக்கில் சென்றுகொண்டிருந்தோம். கொஞ்ச தூரத்தில் 'உண்மை உங்களை வரவேற்கிறது' என்ற எல்லைக் கல்லைப் பார்த்தோம்.
அவள் வேகம் வேகமாக வண்டியை நிறுத்தச் சொன்னாள். நான் நிறுத்தவில்லை., அவள் குதித்தாள்.

நான் பதறிப் போய் பிரேக் அடித்தேன். பைக் அரை வட்டம் போட்டு நின்றது. அவளுக்கு என்ன ஆகியிருக்குமோ என்ற பதட்டத்தில் சுற்றிலும் பார்த்தேன்.

அவளை எங்கேயும் காணவில்லை. மறைந்து போயிருந்தாள்.

திரும்பிப் போய்விடலாம் என்ற எண்ணத்தில் பைக்கை ஸ்டார்ட் செய்தேன். ஆனால்... மனது எல்லையைக் கடக்க சொல்லிற்று. பைக்கை வேகமாக செலுத்தினேன். நான் எல்லையைத் தாண்டி நுழைந்த வினாடி... என் மீது அளவிடவே முடியாத வெளிச்சம் பாய்ந்தது. அங்கே பாதையும் இல்லை., பயணமும் இல்லை. எதுவுமற்ற நிலையே நிலைத்திருந்தது. என் நொறுங்கிப் போன மனம் மீண்டும் ஒன்றாக இணைந்து கொண்டது. அதில் பதிவாகியிருந்த கவலை, துக்கம், சந்தோஷம், காதல் எல்லாமும் அழிந்து போயிற்று.

மறுநாள் காலை. என் கேமராவை எடுத்துக்கொண்டு புகைப்படம் எடுக்க கிளம்பினேன். தெருவில் கிடந்த கேமராவை யாரோ ஒருவரின் வார்த்தை காப்பாற்றியிருக்கிறது. முக்கியமானவர்களுக்காக முக்கியமில்லாதவர்கள் கைவிடப்படுவார்கள். இவ்வளவுதான் உறவின் தத்துவம்.

எதிர் திசைகளில் பயணிக்கும் இரண்டு ஆன்மாக்கள் ஒருபோதும் இணைவதில்லை. இந்த இருபத்திமூன்று ஆண்டுகளில் நாங்கள் சந்திக்கவே இல்லை. யார் எங்கே இருக்கிறோம் என்று தெரியாது. உண்மையானவர்கள் உங்களை எல்லை நோக்கி அழைத்துச் செல்லும்படி வைக்க மாட்டார்கள். அப்படியே அழைத்தாலும் உங்கள் கூடவே வருவார்கள். அவர்களுக்கு உண்மையைப் பார்த்து பயமில்லை.

என்றாலும்... யாரையும் எல்லை நோக்கி அழைத்துச் செல்லாதீர்கள். அதற்கு அப்பால் உண்மை இருக்கிறது. உண்மை ஆபத்தானது., பொய் பாதுகாப்பானது.

Sunday, 22 December 2013

உண்மை உங்களை வரவேற்கிறது 1


யாரையும் எல்லையை நோக்கி அழைத்துச் செல்லாதீர்கள். அதற்கு அப்பால் உண்மை இருக்கிறது. உண்மை ஆபத்தானது.

உங்களுக்கு சிறந்த நண்பன் இருக்கலாம்., காதலி இருக்கலாம்., மனைவி இருக்கலாம்., பெற்றோர் இருக்கலாம்., குழந்தைகள் இருக்கலாம். யாராக இருந்தாலும் எல்லையை நோக்கி அழைத்துச் செல்லாதீர்கள். நீங்கள் உண்மையானவர் என்றால்... நொறுங்கிப் போவீர்கள்.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு பாம்பேயில் எனக்கொரு காதலி இருந்தாள். அவள் அழகானவள்., அமைதியானவள்., ஏன் உண்மையானவளும் கூட.

ஒரு மாலையில் நான் அவளைப் பார்ப்பதற்காக சர்ச் கேட் போய் இறங்கினேன். அப்போது சில பெண்கள் அவளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்களை நான் புகைப்படம் எடுக்கச் சென்ற பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர்களைக் குறித்து எனக்கு எந்த மரியாதையும் இல்லை. அதற்குப் பல மோசமான காரணங்கள் இருந்தது.

"அவர்களோடு உனக்கு நட்பு வேண்டாம்." என்றேன் என் காதலியிடம்.

அதற்கு அவள் ஏதேதோ கருத்துக்களையும், காரணங்களையும் சொன்னாள்.

கடைசியாக அவர்கள் நட்பைத் துண்டிக்க கால அவகாசம் கேட்டாள். நான் குழப்பமடைந்த இடம் இங்குதான். அவளுக்கு யார் முக்கியம்? என்ற கேள்வி தோன்றியது.

நாட்கள் நகர்ந்தது.

மட்டுங்கா ரயில் நிலையம் - என் காதலியோடு அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை மீண்டும் பார்த்தேன். என் காதலிக்கு யார் முக்கியம்?

"உனக்கு யார் முக்கியம்? நானா? உன் தோழிகளா?" என்று கேட்டேன்.

"நீங்கள்தான்." என்றாள்.

"அப்படியென்றால் அவர்கள் நட்பை விட்டு விடு."

"எனக்கு அவகாசம் வேண்டும்." இரண்டாவது முறையாக கேட்டாள். சில நேரங்களில்... ஒரு வினாடியில் எடுக்கப்படாத முடிவு, எப்போதுமே முடிவடையாது.

சொல்லாலும் செயலாலும் பின்னப்பட்டது வாழ்க்கை. சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பது உண்மை. சொல் வேறும், செயல் வேறுமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நான் அவளை எல்லைக்கு அப்பால் அழைத்துச் செல்ல முடிவு செய்தேன்.

தினமும் அவளிடம் "உன் தோழிகளை விட்டு எப்போது விலகுவாய்?" என்று கேட்க ஆரம்பித்தேன். தினம் ஒரு சண்டை. சண்டைக்கு நடுவே அவளை மெதுவாக எல்லையை நோக்கி அழைத்துச் சென்றேன்.

அவள் பாதி வழியில் நின்றுகொண்டாள். அதற்கு மேல் வரவில்லை. என்னோடு பேசுவதை குறைத்துக் கொண்டாள்.

எனக்கு புரிந்து போயிற்று. முக்கியமானது இருக்கும்., முக்கியமில்லாதது காணாமல் போகும். இங்கே காணாமல் போகப் போவது நானா? அவள் தோழிகளா?

ஒரு நடுப் பகலில் கடைசி சண்டை நிகழ்ந்தது. மறுநாள் அவள் வீட்டில்தான் இருந்தாள் என்பதை நான் அறிவேன். தொலைபேசியில் அழைத்தேன். அவள் எடுக்கவில்லை. இனி என் அழைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்று உள் மனம் சொல்லிற்று.

ஆனாலும்... கடைசியாக அந்த பொய்யான குரலைக் கேட்க விரும்பினேன். என் அழைப்பு அவள் வீட்டு தொலைபேசியில் ஒலித்துக் கொண்டிருந்தது...

அடுத்த வாரம்...