பாம்பே - அது 1993 ஆம் ஆண்டு முதல் மாதத்தின், கடைசி நாளின் நடு இரவாக இருந்தது.
நான் அறைக்குள் நுழைந்த நேரம், அவள் சுவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். மங்கிய வெளிச்சத்தில் நாற்பத்தைந்து வயதுதானிருக்கும் என்று தோன்றியது. மேல்தட்டு வர்க்கத்தின் அழகு அவளிடம் இருந்தது. இரண்டு மூன்று நாட்களாக அவள் தூங்கவில்லையென்பது அந்த வெண்ணிற முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. அந்த அறையின் நிசப்தம் அவளை நிலை குலையச் செய்திருந்தது.
என் முகத்தை ஒரே ஒரு முறை நேருக்கு நேராக பார்த்தாள். பிறகு சுவரை பார்க்கத் துவங்கினாள். நான் மேஜை மேலிருந்த ஃபைலை எடுத்துப் பார்த்தேன் - அதிர்ச்சியானேன். ஆனால்... வெளியே காட்டிக் கொள்ளவில்லை. உணர்வுகளை வெளியே காட்டக் கூடாது என்பதுதான் எங்கள் முக்கியமான பாடம். அவள் தோற்றத்திற்கும், செய்த செயலுக்கும் எந்த தொடர்பும் இல்லாமலிருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. நான் அவளைப் பற்றிய தகவலை எண்களாக சிலேட்டில் எழுதினேன்.
அவளை சுவர் ஓரமாக, அளவு கோல் வரையப்பட்டிருந்த இடத்தில் வந்து நிற்கச் சொன்னேன். ஏன்? எதற்கு? என்ற கேள்வி கூட அவளிடமில்லை. அமைதியாக வந்து நின்றாள். சிலேட்டை அவளிடம் நீட்ட, எந்த மறுப்பும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள். ஆனால்... அவள் கண்களில் 'இது எதற்கு?' என்ற கேள்வி தோன்றியது. ஆனால்... கேட்கவில்லை.
நான் அவளை மூன்று புகைப்படங்கள் எடுத்தேன். அந்த நடு இரவில் என் கேமராவின் ஷட்டர் சத்தமும், வெளிச்சம் சிதறி பிளாஷ் சக்தியை உருஞ்சும் சத்தமும் துல்லியமாக கேட்டது. அவள் எந்த உணர்ச்சியையும் கேமராவுக்கு காட்டவில்லை. ஆனால்... அவள் மௌனம், அந்த இரவை துன்புறுத்துவதாக இருந்தது.
அவள் உடலும், மனமும் தளர்ச்சியாக இருந்ததால் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள்.
வாசலில் ஏதோ அசைவு தெரிந்தது. நான் திரும்பிப் பார்க்க, கோக்டே நின்று கொண்டிருந்தார். "டைம் நகி ஹே. ஓஹயா க்யா?"
நான் ஆமாம் என்று தலையசைத்தேன். அவர் அவளை கட்டளையோடு கையசைத்து அழைத்தார். அவள் இப்போதும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் எழுந்தாள்., போகும் போது என் தலை முடியை கோதிவிட்டபடி, ஒரு கடினமான புன்னகையை தந்துவிட்டு போனாள்.
எனக்கு பட்டென்று என் அம்மாவின் ஞாபகம் வந்தது.
நான் ஃபைலில் கையெழுத்துப் போட்டுவிட்டு, அன்டாப் ஹில் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். இரண்டு காவலர்கள் ஒருவனை அடித்து இழுத்துக் கொண்டு உள்ளே போனார்கள்.
அவள் முகம் என் மனதைவிட்டு விலகாமல் கூடவே வந்துகொண்டிருந்தது. அவள் தன் கணவனை ஆறு இடங்களில் கொடூரமாக குத்திக் கொன்றாள் என்று முதல் தகவல் அறிக்கை சொல்லியது. முதல் குத்தில், கத்தி விலா எலும்பின் இடிவெளியில் நுழைந்து, இதயத்தை துளைத்திருக்கிறது. மரணம் அந்த நிமிடமே நிகழ்ந்திருக்கலாம். பிறகு அவள், ஐந்து இடங்களில் பிணத்தைக் குத்தியிருக்கிறாள். அது சாதாரண கத்தியால் செய்ய முடியாது என்ற அனுமானங்கள் இருந்தது. ஏழாவது மாடியிலிருந்து கத்தியை வீசியிருக்கிறாள். அது இன்னும் கிடைக்கவில்லை. விலா எலும்பைக் கடந்து சாதாரணமாக கத்தி உள்ளே நுழைந்து விடாது. மட்டுமல்லாமல் ஒரு பெண்ணால் அது சாத்தியமா? இங்கே எப்படி நடந்தது? கணவனின் கொடூரம் அவளை கொடூரமாக மாற்றியிருக்கலாம். எப்படியோ... இன்று இரவு நடக்கப் போகும் விசாரணையில் எல்லா உண்மைகளும் தெரிய வரும். ஆனால்... உண்மைதான் வெற்றி பெறுமா? என்ற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை.
அவள் முகத்தை நான் என் கேமராவில் பத்திரமாக எடுத்து வந்துகொண்டிருந்தேன். நாளை அவளை சந்திக்கும் போது, என் கேமராவிலிருக்கும் முகத்தைப் போல, அவள் முகம் இருக்காது என்பது எனக்குத் தெரியும். அது எனக்கு ஒருவித துக்கத்தை ஏற்படுத்தியது. நான் நிறைய குற்றவாளிகளைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் இப்படி ஒரு துக்கத்தை தந்துவிட்டு போனதில்லை. என்னிடம் அவள் ஏன் அப்படி நடந்துகொண்டாள் என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. அவள் என் கேசத்தை கோதிச் சென்ற ஸ்பரிசத்தை நான் இன்னும் சுமந்துகொண்டிருக்கிறேன்.
