அவனால் என்னை நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை. தலை குனிந்து கீழே பார்த்துக் கொண்டிருந்தான்.
நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
எங்களுக்கு நடுவே இரண்டு யூஸ் அண்ட் த்ரோ கப்புகளில் மது நிறைந்திருந்தது.
அவனுக்கும் குடிக்க மனதில்லை., எனக்கும். எதை வைத்து அவன் அப்படிச் சொன்னான் என்று என் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. நான் என்னை எப்படி வேண்டுமானாலும் மதிப்பிடலாம். ஆனால்... சமூகமும் அப்படியே மதிப்பிட வேண்டிய காட்டாமில்லை. அது வேறு மாதிரியான மதிப்பீட்டை வைத்திருக்கும்.
பல நல்லவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் இந்த சமூகம் மதிப்பீடு செய்துகொள்கிறது. அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமானால்... இந்த சமூகத்திற்காக நாம் சிறந்த நடிகர்களாக மாறியாக வேண்டும்.
நான் யூஸ் அண்ட் த்ரோ கப்பிலிருந்த மதுவை காலி செய்தேன். அவனுக்கு இன்னும் என்னை நேருக்கு நேர் பார்க்கும் துணிவு வரவில்லை. மூன்று நிமிடங்களுக்கு முன், "நீ ஒரு காரியவாதி." என்று அவன் என்னை பார்த்துச் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் மனதுக்குள் மோதிக்கொண்டே இருந்தது. நீண்ட ஆண்டுகள் பழகிய நண்பனே இப்படி ஒரு வார்த்தையைச் சொன்னான் என்றால்... இந்த சமூகம்?
"என்னப் பாரு." என்றேன்.
சில வினாடிகள் அவன் என்னைப் பார்க்கத் துணியவில்லை. பிறகு மெதுவாக தடுமாறும் கண்களோடு பார்த்தான்.
"உனக்குத் தெரியும் நான் அமைதியான ஆள் இல்லன்னு. அடுத்தவன் பிரச்சனைக்கு போயிப் போயியே என் வாழ்க்கய தொலைச்சிட்டேன். இப்ப காலம் அமைதியா இருக்க கத்துக் குடுத்துருக்கு. அமைதியா இருக்கிறேன். அமைதியா இருக்றவன் காரியவாதின்னா... அப்படியே இருந்துட்டு போட்டும்."
அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. மீண்டும் குனிந்து கொண்டான்.
"எங்கிட்ட பொண்டாட்டி இல்ல, குழந்தை இல்ல, சொந்த வீடு இல்ல, கார் இல்ல, பேங்ல பணமில்ல, ஏன்? சொல்லிக்ற மாதிரி வேலை கூட இல்ல. இதெல்லாம் வச்சிருக்ற நீ காரியவாதியா? நான் காரியவாதியா?" என்று கேட்டேன்.
அவன் அதற்கும் அமைதியாக இருந்தான். அமைதியை சிலர் இயல்பாக வைத்திருப்பார்கள். அவன் பதில் சொல்ல முடியாததால் வைத்திருந்தான். அடுத்த வினாடியே, அந்த இடத்தை விட்டு போகவேண்டும் போலிருந்தது. எனக்காக காத்திருந்த மதுக் கப்பை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன்.
நடு இரவில் சென்னையின் தெரு அமைதியாக இருந்தது.
குடும்பத்திற்காக குடும்பத்திலிருந்து பிறக்கிறது குற்றம். அதில்தான் இந்த சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து மாறி நிற்பவன் துணிச்சலானவன். துணிவில்லாதவர்களால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கப்பை காலி செய்து கசக்கி தூக்கியெறிந்தேன். யூஸ் அண்ட் த்ரோ கப் போய் மண்ணில் விழுந்தது.
