Sunday, 6 October 2013

காந்தியின் புன்னகை


அது நடு இரவாக இருந்தது. பாருக்குள் குடித்து, தெருவில் குடித்து, கடைசியாக ஒரு மரத்தடியில் குடித்து முடித்த பிறகுதான்... அந்த இரவு நலமாக தோன்றியது.

நண்பர்கள் எல்லோரும் விடை பெற தயாராகும் போது... அந்த இரவைத் தட்டும் சத்தம் கேட்டது. அவன் எப்படியும் கீழே விழுந்து சாமி கும்பிடுவான் என்று குமார் சொன்னான்.

எல்லோரும் திரும்பிப் பார்த்தோம். அவர் அறுபது வயதைத் தொட்ட மனிதராக இருப்பார் என்று தோன்றியது. இன்னும் சில நிமிடத்தில் கீழே விழுவார் என்று உறுதியாக தெரிந்தது., அவ்வளவு போதை.

கீழே விழுந்தால் பரவாயில்லை. அவர் ஓட்டி வந்த புல்லட் அவர் மீது விழுந்தால்... நிச்சயமாக அவர் அவ்வளவுதான். எல்லோரும் ஓடிப்போய் பைக்கைப் பிடித்தோம். அவர் கீழே சரிந்தார்.

மாலையில் அழகாக உடுத்தி வந்த மல்லிகைப் பூ வேட்டியும், சட்டையும் அழுக்கானது. புல்லட்டை ஸ்டேன்டில் நிறுத்தினேன். இனி இவரை என்ன செய்ய? இந்த கேள்விக்கு ஒரு நண்பன் சொன்னான். இவன் ஏதோ அண்ணாச்சி. இங்கேயே கிடக்கட்டும்.

அவர் சட்டைப் பையில் குப்பைக் கூடையில் கிடக்கும் காகிதம் போல பணம் கசங்கிக் கிடந்தது. இப்படியே விட்டுவிட்டு போவதும் சரியில்லை என்று தோன்றியது.

நாங்கள் ஆறு பேர் இருந்தோம். யாராவது ஒருவர் அவர் வீட்டில் கொண்டுபோய் விடலாம் என்று முடிவானது. அந்த ஒருவர் யாரென்றால் நான்தான். அதற்கு காரணம் இருந்தது. அந்த கூட்டத்தில் எனக்கு மட்டும்தான் புல்லட் ஓட்டத் தெரியும்.

முகவரி விசாரிக்க, தடுமாற்றத்தோடு சொன்னார். அது இரண்டு தெரு தள்ளிதான் இருந்தது. நண்பர்களில் ஒருவன் தம்மடித்துவிட்டு வந்து என்னை பிக்கப் பண்ணிக் கொள்வதாக சொன்னான். நாங்கள் புறப்பட்டோம். அவர் ஒரு குழந்தையைப் போல என் முதுகில் சாய்ந்து கிடந்தார். குழந்தை வாந்தி எடுத்துவிடக் கூடாது என்ற கவலை எனக்கு.

அவர் முனங்கிய கதவு எண் முன்னால் நின்றபோது... என்னால் நம்ப முடியவில்லை. அது அவர் வீடாக, மன்னிக்கவும்... பங்களாவாக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது.  அவர் வருகைக்காக எந்த விளக்கும் அங்கே எரிந்துகொண்டிருக்கவில்லை. ஆனால்... காவலாளி ஓடி வந்து அவரைத் தாங்கிக் கொண்டான்.

அந்த தடுமாற்றத்திலும் “நானை நீ என்னைப் பார்க்க வரவேண்டும்“ என்று சொன்னார். அந்த குரலில் ஒரு நட்பின் வேண்டுகோள் இருந்தது. அதனால்...

மறுநாள் மாலை அவர் முன்னால் நான் உட்கார்ந்திருந்தேன்.

ஒரு நீண்ட உரையாடல். அவர் மெட்ராசுக்கு வந்து கஷ்டப்பட்டு முன்னேறிய கதையைச் சொன்னார். அது பல பணக்காரர்களின் கதை என்பதால், அது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

இருவருமே விடைபெற விரும்பினோம்.

அவர் பர்சை எடுத்து விரித்தார். அதில் பத்து ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை அடுக்கப்பட்டிருந்தது. எந்த நோட்டை எடுப்பதென்று மனம் தடுமாறியதை, அவர் விரல்கள் காண்பித்தது.

கடைசியா 500 ரூபாயை எடுத்து என்னிடம் நீட்டினார்.

நான் புன்னகைத்தேன். அது ஏன் என்று புரியாமல் பார்த்தார்.

‘நீங்கள் கோடீஸ்வரனாக இருந்தாலும்... மனதில் இன்னும் ஏழையாகவே இருக்கிறீர்கள். உங்களைவிட நான் பணக்காரன்.‘ என்று என் மனதில் தோன்றியதை அவரிடம் எப்படிச் சொல்ல முடியும்?

நான் வேண்டாம் என்று தலையசைத்துவிட்டு எழுந்த போது, அவர் சலிப்பாக சொன்னார். “தம்பி, ஏழையின் குழந்தைகள் தகப்பனை நேசிக்கிறார்கள். பணக்காரனின் குழந்தைகள், அவன் பணத்தை நேசிக்கிறார்கள்.

நான் எதுவும் சொல்லவில்லை. புரிந்ததாக தலையசைத்துவிடு வெளியே நடந்தேன்.

அவர் கையிலிருந்த பணத்தில் காந்தி புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

அந்த ஏழை மனிதன் யார் என்று நீங்கள் தேட வேண்டாம். அவரைப் போல நிறையபேர் இருக்கிறார்கள்.