Saturday, 2 November 2013

ஏன் அப்படிச் செய்தாய்?

தினேஷ் குமார்
எப்படி சிரிக்கிறான் என்று பாருங்கள். இவன் பெயர் தினேஷ் குமார். நாகர்கோவில் நகரத்தில் இவனை நீங்கள் எங்காவது பார்க்க நேரலாம். எனக்குத் தெரிந்து, இவன் சுற்றித் திரியும் இடங்களைச் சொல்கிறேன். அது உங்களுக்கு உதவக் கூடும்.

செட்டிகுளம் ஜங்ஷன், வேப்ப மூடு ஜங்ஷன், மணிமேடை ஜங்ஷன். இந்த மூன்று இடங்களில், அனேகமாக நீங்கள் இவனைப் பார்க்கலாம். அப்படி பார்க்க நேர்ந்தால்... ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்க வேண்டும். அந்தக் கேள்வி உங்களுக்கு கடினமாக இருக்காது என்றே நம்புகிறேன். அந்தக் கேள்வியைக் கேட்க நீங்கள் பயம் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால்... இவன் என் குழந்தை பருவத்து நண்பன்.

'ஏன் அப்படிச் செய்தாய்?' என்று கேட்க வேண்டும். எளிமையாகத்தானே இருக்கிறது?

இந்தக் கேள்வியை நானும் கேட்டிருக்கிறேன். ஆனால்... எனக்கு சரியான பதிலை இவன் தரவில்லை. உங்களுக்காவது தருகிறானா என்று பார்ப்போம்.

நாகர்கோவில். 1989 ல் ஏதோ ஒரு மாதம். அது எங்கள் இளமைக் காலம். இவன் அக்காவின் மாமனாருக்கு மாரடைப்பு. ஒரு பிரபல மருத்துவ மனையில் வைத்திருந்தார்கள். இவன் அங்கேயே தவமிருக்க, நானும் உடனிருந்தேன். அப்போதுதான் நான் அந்த தேவதையைப் பார்த்தேன். தேவதைகள் கருப்பாகவும் இருப்பார்கள் என்று அப்போதுதான் தெரிந்தது. வெண்ணிற உடையில் நர்சாக வந்துகொண்டிருந்தாள். முதல் பார்வையிலேயே எனக்கு அவளைப் பிடித்துவிட்டது. என் அருகில் வந்தவள் ஒரு புன்னகையை வீசிவிட்டுப் போனாள். எனக்கு காய்சல் வந்துவிட்டது.

பிறகு வந்த நாட்களில் காதல் கொஞ்சம் கொஞ்சமாக துளிர்க்க ஆரம்பித்தது. பத்து நாட்களில், நாங்கள் பத்து வார்த்தைகள்தான் பேசியிருப்போம். நான் பாம்பே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், காதலைச் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது . மறுநாள் அவளிடம் என் காதலைச் சொல்ல காத்திருந்தேன்.

அவள் வரவில்லை. பிறகுதான் தெரிந்தது, அன்று அவளுக்கு விடுமுறை என்று. நான் சுமந்துகொண்டிருந்த வார்த்தைகளை என்ன செய்ய? ஒரு காகிதத்தில் எழுதி, கடிதமாக தினேஷ் குமாரிடம் குடுத்தேன். 'அவளிடம் எப்படியும் கொடுத்துவிடு' என்றேன்.

இவன் நம்பிக்கையாக 'குடுத்துவிடுவேன்' என்றான். அன்றே நான் பாம்பே புறப்பட்டேன். அங்கே ஒவ்வொரு நாளும் அவளிடமிருந்து கடிதம் வரும் வரும் என்று காத்திருந்தேன். வரவேயில்லை. நாட்கள் செல்லச் செல்ல என் காதலும் மங்கிப் போனது.

2009 ம் ஆண்டு. ஒரு சாயங்காலத்தில் நானும் இவனும், நாகர்கோவில் நேதாஜி ஸ்டோருக்கு முன்னால் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் அவளை மீண்டும் பார்த்தேன். எனக்கு பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வந்துவிட்டது. அவள் என்னைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. கடந்து போனாள். முகத்தில் கொஞ்சம் கவலை படிந்திருந்தது. கழுத்தில் தாலி. தாலி கட்டிய தேவதையை பின் தொடர விரும்பாமல் நான் அப்படியே பார்த்தபடி இவனிடம் சொன்னேன். 'அவள் என் கடிதத்திற்கு பதில் எழுதியிருந்தால்... அவள் வாழ்க்கை வேறு மாதிரியாக இருந்திருக்கும். என் வாழ்க்கையும்தான்.'

அதற்கு இவன் சாதாரணமாக 'நான் அந்த லெட்டர அவள்ட குடுக்கவே இல்லியே.' என்றான்.

நான் அதிர்ச்சியில் இவனையே பார்த்தேன்.

'அந்த லெட்டர் இன்னும் எங்கிட்ட பத்திரமா இருக்கு' என்றான்.

'நீ ஏன் அப்படி செய்தாய்?' என்று கேட்டேன்.

அதற்கு இவன் வரலாற்றில் யாருமே சொல்ல முடியாத ஒரு பதிலைச் சொன்னான். 'வா, டீ குடிக்கப் போலாம்.'

இன்னொருவனின் படிக்கப்படாத காதல் கடிதத்தை, இருபது வருடங்களாக பத்திரப்படுத்தி வைத்திருப்பவனை என்ன செய்வது? இப்போது கூட நான் அதிர்ச்சி மாறாமல்தான் இருக்கிறேன். நீங்கள் இவனை எங்காவது பார்த்தால் 'ஏன் அப்படிச் செய்தாய்?' என்று கேட்டுச் சொல்லுங்கள்.