Saturday, 26 October 2013

மொழியறியாத வீடு


குழந்தைகளிருக்கும் வீட்டில்
பொம்மைகளும் வசிக்கத் துவங்கிவிடுகின்றன.

கைவிடுதலும்
புறந்தள்ளுதலும்
புகார் சொல்லுதலும்
பொம்மைகளிடம் இல்லை.

பேசுபவர்களோடு ஒருபோதும்
பேசுவதில்லை பொம்மைகள்.

பூட்டப்பட்டிருக்கும் வீட்டுக்குள்
பொம்மைகள் என்ன பேசிக்கொள்ளும்
என்பதை அறியாமலேயே
கதவு திறக்கப்படுகிறது.

மௌனத்தின் மொழியறியாத வீடு
வார்த்தைகளால் மூழ்கிக் கிடக்கிறது.

குழந்தைகளின் அழுகையை
நிறுத்தும் பொம்மைகள்
தன் அழுகையை
மௌனத்தில் மறைத்துக் கொள்கிறது.

குழந்தைகளின் மாற்றம்
குப்பைத் தொட்டியை
பொம்மைகளின் வீடாக மாற்றுகிறது.

பொம்மைகள் அறிவதில்லை
தன் வாழ்நாளை.

குழந்தைகளின் மனதில்
மறைந்திருக்கிறது
பொம்மைகளின் ஆயுள்.
- ஸ்நேகிதன்

Saturday, 19 October 2013

புதிதாக பிறக்கலாம்

குணா
நான் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்குள் நுழைந்த நேரம், நண்பர் குணா யாரிடமோ செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். அது மிகவும் முக்கியமான உரையாடல் என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது. என்னிடம் கையசைத்து காத்திருக்குமாறு சொன்னார்.

நான் அமைதியாக உட்கார்ந்தேன்.

அவர் செல்ஃபோனில் சொன்னார். நீ ஒரு காரியம் செய். நேராக ஒரு துணிக் கடைக்குப் போ. அங்க ஒரு காவி வேட்டியும், சட்டையும் வாங்கிக்க. அதை அங்கயே மாத்திட்டு, சென்ட்ரல் ஸ்டேஷன் போ. அங்க வடநாட்டுக்கு என்ன டிரையின் போகுதோ... அதுல ஏறி உட்கார்.

நான் ஒன்றும் புரியாமல் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்தார்.

“டிரையின் போகப் போக நீ வாழ்ந்த வாழ்க்கையும், இனி எப்படி வாழப் போறோம்ங்ற கேள்வியும் உன்னை சுத்தியே வரும். நீ உன்னோட செல்ஃபோனை தூக்கி வெளிய எறி.

எனக்கு குணாவின் உரையாடல் புரியாவிட்டாலும், ஒரே வினாடியில் சுவாரசியமானது. கவனித்தேன்.

“அப்புறம்... உன்னிடம் இருக்ற பணத்தையெல்லாம் எடு. அதையும் வெளிய வீசியெறி. எப்போ உங்கிட்ட பணமில்லையோ, அப்பவே நீ செத்துப் போயிட்ட.

நான் குணாவின் முகத்தைப் பார்த்தேன். அவர் லேசாக புன்னகைத்தார். ஆனாலும்... அவர் பேச்சில் ஒரு ஆழமான கவனம் இருந்தது. நான் அவசரமாக செல்ல வேண்டும். ஆனாலும்.. அவர் பேச்சின் சுவாரசியத்தில் அப்படியே இருந்தேன்.

“டிரையின் கடைசியா எந்த ஊர்ல நிக்குதோ, அங்க இறங்கு. உன்கிட்ட பணமில்ல, மாத்து துணி இல்ல, படுக்க இடமில்ல, சொந்தம் இல்ல, நண்பர்கள் இல்ல. அங்கயே அலைஞ்சி திரி. அப்போ உனக்கு மனுஷங்க யார்னு தெரியும். நீ யார்னு புரியும். ஒரு வருஷம் கழிச்சி இங்க வா. அப்போ நீ ஒரு சரியான வாழ்க்கைய வாழலாம். அது உன்னோட ரெண்டாவது பிறப்பு. அந்த வாழ்க்கை உனக்கு புதுசா இருக்கும். என்னைத் தேடி ஒரு நண்பர் வந்திருக்றார். அவரை அனுப்பிட்டு கூப்பிடுறேன். அதுவரை எதுவும் செய்யாத. காத்திரு.என்று தற்காலிகமாக பேச்சை முடித்துவிட்டு, என்னைப் பார்த்து சிரித்தார்.

இருவரும் டீக் கடைக்கு வந்தோம். டீயைக் குடித்துக் கொண்டே “என் திரைப்படத்திற்கான தலைப்பை ஒருவன் திருடி ரெஜிஸ்டர் பண்ணியிருக்கிறான். அவனிடமிருந்து அதை எப்படி வாங்குவது. என்று கேட்டேன். அவர் சில விஷயங்களைச் சொன்னார். ஆனால்.. அவர் கவனம் என்னிடம் இல்லை. அவர் பார்வை அடிக்கடி செல்ஃபோனுக்கு சென்று கொண்டிருந்தது.

“எதாவது சிக்கலா?என்று கேட்டேன். அவர் “இல்லை.என்று துவங்கி, இருந்ததை லேசான புன்னகைக் கலந்து சொன்னார். எனக்கு பகீர் என்று இருந்தது. நான் வேகமாக விடை பெற்றுக் கொண்டேன்.

அவர் வேகமாக செல்ஃபோனை காதில் வைத்தபடி போனார்.

நான் சிகரெட் ஒன்றை பற்ற வைத்தேன். ரோட்டைப் பார்த்தேன். உயிர் வாழ்வதற்காக எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். ஆனால்... குணாவின் நண்பன் தற்கொலை செய்வதற்காக காத்திருக்கிறான்.

இந்த வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் அவன், கடைசியாக குணாவிடம் பேசிவிட்டு தற்கொலை செய்துகொள்ளலாம் என்றிருந்திருக்கிறான். அப்போதுதான் நான் உள்ளே நுழைந்திருக்கிறேன். குணா அவன் மனதை எப்படியும் மாற்றிவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. சினிமா அதை அவருக்கு கற்றுக் கொடுத்திருந்தது. ஆனால்... வாழ்க்கை சினிமா அல்ல.

தற்கொலை செய்வதை விட, புதிதாக பிறப்பது அழகானது. ஆனால்... கடினமானது. அந்த நண்பன் புதிதாக பிறக்க சம்மதித்தானா என்று இனிதான் குணாவிடம் கேட்க வேண்டும்.

Sunday, 13 October 2013

தொலைந்த வார்த்தைகள்


வார்த்தையை நாம் தொலைக்கும் போது, அதன் தத்துவத்தை, கருத்தை, நம்பிக்கையையும் சேர்த்துத்தான் தொலைக்கிறோம்.

ஒரு வார்த்தை அதன் அழகை பொருளில் வைத்திருக்கிறது. ஒரு பெண் தன்னை வைத்திருப்பது போல. தத்துவம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு... ‘பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தே தத்துவம்.‘ இதுவே பதில்.

தத்துவம் தோற்கும் போது, வார்த்தை தொலைந்து போகிறது. ‘நல்லவன் வாழ்வான்.‘ என்ற ஒரு நம்பிக்கை காலம் காலமாக இருந்து வந்தது. இப்போது அந்த தத்துவம் நம்பிக்கையை இழந்துவிட்டது. அதனால்... நல்லவன் என்ற வார்த்தை தொலைந்துவிட்டது.

ஒரு வார்த்தையில்லாமல் அந்த தத்துவம் தவிக்க, அந்த இடத்தை கெட்டவன் என்ற வார்த்தை ஆக்ரமித்துக் கொண்டது. ‘கெட்டவன் வாழ்வான்.‘ இதுதான் புதிய தத்துவம்.

மனிதர்களின் சூழல் மாறும் போது, வாழ்வு மாறுகிறது. அதோடு வார்த்தையும் மாறிவிடுகிறது. ஆதியில் பத்திரம் எழுதும் வழக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இடம் உனக்கு. பத்து பணம் தா.என்று விற்பனை நடந்திருக்கும்.

கொடுக்க வேண்டியவன், பணத்தை தந்துவிட்டேன் என்று வார்த்தையை மாற்றியிருப்பான். அதனால்... சாட்சி என்று ஒருவரை உருவாக்கியிருப்பார்கள். பிறகு... வார்த்தை கொடுத்தவனும் சாட்சியும் சேர்ந்து வார்த்தையை மாற்றியிருப்பார்கள்.

இனி... மனிதர்களின் வாய் வார்த்தையை நம்புவதற்கில்லை என்ற முடிவில், வார்த்தையை எழுத்துப் பூர்வமாக்கி, காகிதத்தில் எழுதியிருப்பார்கள். முடிவில் மனிதனின் வார்த்தையை விட, எழுத்து நம்பிக்கையை பெற்றுவிட்டது. இது மனிதனுக்கு அவமானமான ஒன்று என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எப்படியாக இருந்தாலும், வார்த்தை தொலையும் போது வாழ்க்கை தன் முகத்தை மாற்றிக்கொள்கிறது.

உயிர் வாழ்வதற்காக வாக்கை கைவிடும் மனிதன், தன் வார்த்தையை தொலைத்துவிடுகிறான். மனிதன் மட்டுமல்ல ஒரு அரசாங்கம், நிறுவனம், அமைப்பு, மதம், கட்சிகள் எல்லாமும் இதைச் செய்கின்றன.

‘பூஷ்வா‘ என்ற வார்த்தை கம்யூனிஸ்டுகளால் உச்சரிக்கப்பட்டு வந்தது. அது இப்போது தொலைந்துவிட்டது. ஒருவேளை நாம் எல்லோருமே பூஷ்வாவாக மாறிவிட்டதால் அந்த வார்த்தை தொலைந்துவிட்டதோ என்னவோ.

அம்மா, மம்மியாக மாறியதில் அம்மாக்களுக்கு சந்தோஷம்தான். பீட்சா சாப்பிடாத மம்மி எப்படி மம்மியாக முடியும்?  அம்மா என்ற ஒரு வார்த்தை நம் மனதில் எத்தனையோ உணர்வுகளைத் தருகிறது.

அன்பு, தியாகம், பாசம், ப்ரியம், ஸ்பரிசம், தேடல், மரியாதை, முத்தம் இப்படி எல்லா வார்த்தைகளையும், அதன் பொருளையும் நாம் அம்மாவிடமிருந்தே அறிந்தோம். அம்மா என்ற வார்த்தை தொலையும் போது, அதன் பொருளும் தொலையும். அதை மம்மி என்ற வார்த்தை எப்படி மீட்டெடுக்கும்? அதற்கு எவ்வளவு காலம் ஆகும்? அதில் நம் கலாச்சாரம் இருக்குமா? இந்த கேள்விகளுக்கு பதில் என்னவென்று தெரியவில்லை.

மக்கள் தொகையை குறைக்க நினைத்த அரசு ‘சிறு குடும்பம் போதுமே‘ என்று பிரச்சாரம் பண்ணியது. பிறகு ‘நாம் இருவர். நமக்கு இருவர்‘ என்றது. இப்போது ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்.‘ என்று சொல்கிறது. இனி... என்ன சொல்லும்?

‘உனக்கு நானும், எனக்கு நீயும் குழந்தைகள். அதனால் குழந்தை வேண்டாம்.என்று சொல்லுமா?

ஒரு கருத்தை உருவாக்கும் போது, அது எவ்வளவு ஆண்டுகள் உயிர்வாழும் என்ற தொலைநோக்கு சிந்தனை வேண்டாமா? பணத்திற்காக மட்டுமே வேலை செய்பவர்களால் உண்மையாக சிந்திக்க முடியாதுதான்.

நாம் எவ்வளவோ வார்த்தைகளைத் தொலைத்துவிட்டோம். இப்போது நாம் தொலைக்கக் கூடாத ஆங்கில வார்த்தை ஒன்று இருக்கிறது. ஆனால்... அது தொலைந்துகொண்டிருக்கிறது. அந்த வார்த்தை Made in India.                   

Sunday, 6 October 2013

காந்தியின் புன்னகை


அது நடு இரவாக இருந்தது. பாருக்குள் குடித்து, தெருவில் குடித்து, கடைசியாக ஒரு மரத்தடியில் குடித்து முடித்த பிறகுதான்... அந்த இரவு நலமாக தோன்றியது.

நண்பர்கள் எல்லோரும் விடை பெற தயாராகும் போது... அந்த இரவைத் தட்டும் சத்தம் கேட்டது. அவன் எப்படியும் கீழே விழுந்து சாமி கும்பிடுவான் என்று குமார் சொன்னான்.

எல்லோரும் திரும்பிப் பார்த்தோம். அவர் அறுபது வயதைத் தொட்ட மனிதராக இருப்பார் என்று தோன்றியது. இன்னும் சில நிமிடத்தில் கீழே விழுவார் என்று உறுதியாக தெரிந்தது., அவ்வளவு போதை.

கீழே விழுந்தால் பரவாயில்லை. அவர் ஓட்டி வந்த புல்லட் அவர் மீது விழுந்தால்... நிச்சயமாக அவர் அவ்வளவுதான். எல்லோரும் ஓடிப்போய் பைக்கைப் பிடித்தோம். அவர் கீழே சரிந்தார்.

மாலையில் அழகாக உடுத்தி வந்த மல்லிகைப் பூ வேட்டியும், சட்டையும் அழுக்கானது. புல்லட்டை ஸ்டேன்டில் நிறுத்தினேன். இனி இவரை என்ன செய்ய? இந்த கேள்விக்கு ஒரு நண்பன் சொன்னான். இவன் ஏதோ அண்ணாச்சி. இங்கேயே கிடக்கட்டும்.

அவர் சட்டைப் பையில் குப்பைக் கூடையில் கிடக்கும் காகிதம் போல பணம் கசங்கிக் கிடந்தது. இப்படியே விட்டுவிட்டு போவதும் சரியில்லை என்று தோன்றியது.

நாங்கள் ஆறு பேர் இருந்தோம். யாராவது ஒருவர் அவர் வீட்டில் கொண்டுபோய் விடலாம் என்று முடிவானது. அந்த ஒருவர் யாரென்றால் நான்தான். அதற்கு காரணம் இருந்தது. அந்த கூட்டத்தில் எனக்கு மட்டும்தான் புல்லட் ஓட்டத் தெரியும்.

முகவரி விசாரிக்க, தடுமாற்றத்தோடு சொன்னார். அது இரண்டு தெரு தள்ளிதான் இருந்தது. நண்பர்களில் ஒருவன் தம்மடித்துவிட்டு வந்து என்னை பிக்கப் பண்ணிக் கொள்வதாக சொன்னான். நாங்கள் புறப்பட்டோம். அவர் ஒரு குழந்தையைப் போல என் முதுகில் சாய்ந்து கிடந்தார். குழந்தை வாந்தி எடுத்துவிடக் கூடாது என்ற கவலை எனக்கு.

அவர் முனங்கிய கதவு எண் முன்னால் நின்றபோது... என்னால் நம்ப முடியவில்லை. அது அவர் வீடாக, மன்னிக்கவும்... பங்களாவாக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது.  அவர் வருகைக்காக எந்த விளக்கும் அங்கே எரிந்துகொண்டிருக்கவில்லை. ஆனால்... காவலாளி ஓடி வந்து அவரைத் தாங்கிக் கொண்டான்.

அந்த தடுமாற்றத்திலும் “நானை நீ என்னைப் பார்க்க வரவேண்டும்“ என்று சொன்னார். அந்த குரலில் ஒரு நட்பின் வேண்டுகோள் இருந்தது. அதனால்...

மறுநாள் மாலை அவர் முன்னால் நான் உட்கார்ந்திருந்தேன்.

ஒரு நீண்ட உரையாடல். அவர் மெட்ராசுக்கு வந்து கஷ்டப்பட்டு முன்னேறிய கதையைச் சொன்னார். அது பல பணக்காரர்களின் கதை என்பதால், அது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

இருவருமே விடைபெற விரும்பினோம்.

அவர் பர்சை எடுத்து விரித்தார். அதில் பத்து ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை அடுக்கப்பட்டிருந்தது. எந்த நோட்டை எடுப்பதென்று மனம் தடுமாறியதை, அவர் விரல்கள் காண்பித்தது.

கடைசியா 500 ரூபாயை எடுத்து என்னிடம் நீட்டினார்.

நான் புன்னகைத்தேன். அது ஏன் என்று புரியாமல் பார்த்தார்.

‘நீங்கள் கோடீஸ்வரனாக இருந்தாலும்... மனதில் இன்னும் ஏழையாகவே இருக்கிறீர்கள். உங்களைவிட நான் பணக்காரன்.‘ என்று என் மனதில் தோன்றியதை அவரிடம் எப்படிச் சொல்ல முடியும்?

நான் வேண்டாம் என்று தலையசைத்துவிட்டு எழுந்த போது, அவர் சலிப்பாக சொன்னார். “தம்பி, ஏழையின் குழந்தைகள் தகப்பனை நேசிக்கிறார்கள். பணக்காரனின் குழந்தைகள், அவன் பணத்தை நேசிக்கிறார்கள்.

நான் எதுவும் சொல்லவில்லை. புரிந்ததாக தலையசைத்துவிடு வெளியே நடந்தேன்.

அவர் கையிலிருந்த பணத்தில் காந்தி புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

அந்த ஏழை மனிதன் யார் என்று நீங்கள் தேட வேண்டாம். அவரைப் போல நிறையபேர் இருக்கிறார்கள்.