Monday, 8 May 2017

கனவுக் கடை


வரலாறு நெடுக கனவு பற்றிய சம்பவங்கள் நிறைய உண்டு. எல்லா மதங்களிலும் கனவு பற்றிய சம்பவங்கள் வருகின்றன. இதிகாசங்களிலும் கனவுகள் சிதறிக்கிடக்கின்றன. சிலப்பதிகாரதில் கண்ணகி ஒரு கனவு கண்டாள். அதில் அவள் மீது வீண் பழி சுமத்தப்பட்டது. அதனால் கோவலனுக்கு பெரிய தீங்கு உண்டானது. அவள் மன்னனிடம் நீதி கேட்டு மன்றாடினாள். அது அரசயையும் மக்களையும் அழித்தது.

பின்னால் அது அப்படியே நடக்கிறது. கனவுகளில் பல வகைகள் இருந்தாலும்… முக்கியமாக, அடிக்கடி வரும் கனவுகள் (Recurring Dreams), எதிர்காலத்தை உணர்த்தும் கனவுகள் (Prophetic Dreams), தெளிவுநிலை கனவுகள் (Lucid Dreams), கொடுங் கனவுகள் (Nightmares), இதிகாசக் கனவுகள் (Epic Dreams), நோய் தீர்க்கும் கனவுகள் (Healing Dreams), பொய் விழிப்பு கனவுகள் (False Awakening Dreams), பகல் கனவுகள் என்று பல வகை உண்டு.

உளவியலின் தந்தை சிக்மண்ட் பிராய்ட், ‘நாம் செய்யும் எந்த செயலும் தன்னிச்சையாக நடப்பதில்லை. நம் அனைத்து எண்ணங்களையும், செயல்களையும் ஆழ்மனம் கட்டுப்படுத்துகிறது’ என்கிறார். எனவே ஒரு கனவை புரிந்துகொள்வதின் மூலம் ஒரு மனிதனை புரிந்துகொள்ள முடியும்.

அந்த காலத்தில் கனவுகளுக்கு பலன் சொல்வதெற்கென்று திறமையானவர்கள் இருந்திருக்கிறார்கள்.  இப்போது அப்படி யாரும் இல்லை. கனவுகளுக்குப் பலன் சொல்ல ஒரு கடை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இந்த கம்பியூட்டர் யுகத்தில் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா என்றும் தெரியவில்லை. சரி… விஷயத்துக்கு வருகிறேன்.

நான் அதிகமாக கனவு காண்பதில்லை. அப்படியே கண்டாலும் மறந்துபோய்விடுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் நான் கண்ட கனவு, இன்று வரை எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. அதற்குக் காரணம் அந்த கனவு எனக்கு எதையோ சொல்ல வருகிறது என்று தோன்றிக் கொண்டே இருந்ததுதான்.

அந்த கனவில், நான் அதிகாலையில் இல்லை இல்லை., அதை எந்த பொழுது என்று என்னால் சரியாக சொல்ல முடியவில்லை. ஆனால் அது பகல்தான். நான் ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருக்கிறேன். யாரோ என்னை பின்தொடர்வது போல தோன்றுகிறது. பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். மனம் உறைந்து போகிறது. ஒரு சிங்கம் என்னை பின் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதன் கண்களில் என்னைக் கொல்லும் வெறி தெரிகிறது. நான் வேகமாக ஓட ஆரம்பிக்கிறேன். அது துறத்துகிறது. நான் ஆற்றைக் கடந்து தப்பிக்க நினைக்கிறேன். ஆனால்… ஆறு பள்ளத்தாக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. செங்குத்தான பள்ளத்தில் இறங்கினால் சிங்கத்தால் பின் தொடர முடியாது என்ற எண்ணத்தில் இறங்குகிறேன். திரும்பி பார்க்கக் கூட அவகாசமில்லாமல் ஓடுகிறேன். அந்த ஓட்டம் கடினமானது என்றும் கடினமில்லாதது போன்றும் தோன்றுகிறது. நான் ஆற்றில் இறங்கி வேகமாக நீந்துகிறேன். மறு கரையில் ஏறி திரும்பிப் பார்க்கிறேன். சிங்கமும் வெறியோடு நீந்தி வந்துகொண்டிருக்கிறது. நான் மீண்டும் ஓட ஆரம்பிக்கிறேன்.

பள்ளத்தாக்கிலிருந்து மேல் நோக்கி ஓடினால் சிங்கத்தால் ஏற முடியாது என்று தப்புக் கணக்கு போடுகிறேன். நான் வேகமாக மேலே ஏறுகிறேன். விரைவாக சாலைக்கு வருகிறேன். அப்போது ஒருவன் பைக்கில் வருகிறான். அதில் பாய்ந்து ஏறுகிறேன். பின்னால் பார்த்தவாறு உட்காருகிறேன். சிங்கம் விடுவதாக இல்லை. அதுவும் சாலைக்கு வந்து பைக்கை பின் தொடர்கிறது. எனக்கு உடல் சில்லிடுகிறது. பைக் ஓட்டுபவனின் இதயத்துடிப்பு எனக்கு கேட்கிறது. நான் செல்ஃபோனை எடுத்து நண்பருக்கு தகவல் கொடுக்கிறேன். எப்படியோ எங்கள் பைக் ஊருக்குள் நுழைகிறது. விளையாட்டுக்கு சொல்கிறார்கள் என்று பேசிக்கொண்டிருந்த ஊர் மக்கள் தெறித்து ஓடுகிறது.

நண்பர் துப்பாக்கியில் மருந்தை போட்டு இடித்துக்கொண்டிருக்கிறார். பைக் அவர் அருகே செல்ல, நான் அவரிடமிருந்து துப்பாக்கியை வாங்குகிறேன். சிங்கம் என் மீது பாய்ந்த வினாடி, துப்பாக்கி வெடிக்கிறது. பைக் தடுமாறி கீழே விழுகிறது. நான் காற்றில் பறந்து நிற்க, சிங்கம் தரையில் இறந்து கிடக்கிறது. ஊர் கூடி நின்று பார்க்கிறது. இவ்வளவுதான் என் கனவு.

இந்த கனவுவை கடந்த ஆண்டு என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இந்த ஆண்டு அதற்கான விடை கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் எனக்கு தரவேண்டிய பணத்தை ஒரு நமர் ஏமாற்ற நினைத்திருக்கிறார். அதை இயற்கை எனக்கு கனவாக காட்டியிருக்கிறது. கனவை புரிந்துகொண்டு கேட்டிருந்தால்… அப்போதே வாங்கியிருக்கலாம். அவர் சொன்ன வாக்கை நம்பிக்கொண்டிருந்ததில்தான் பிரச்சனை. இனி கனவுதான் காட்சியாக மாறவேண்டும். சிங்கம் என்பது ஒரு நமரைக் குறிக்கிறது என்பது தெளிவாகிவிட்டது.

துறத்துதல், பைக், வந்த நபர், துப்பாக்கி, நண்பர், சிங்கம் சாய்வது, ஊர் மக்கள் போன்றவற்றுக்கான மறைபொருளை அடுத்து பார்க்கலாம்.


தொடரும்…

Monday, 9 November 2015

தீபாவளி எல்லா வருடமும் வரும்

தமிழ்மணியும், மோனா பழனிச்சாமியும்

தீபாவளி வரும்போதெல்லாம் எனக்கு தமிழ்மணிதான் ஞாபகம் வருவார். தமிழ் சினிமாத் துறையில் லட்சியத்திற்காக திருமணம் செய்யாமல் இருக்கும் கூட்டத்தில் ஒருவராக அவரைச் சொல்லலாம். அவர் எல்லோருக்குமே பிரியமான மனிதர் என்று நினைக்கிறேன். கடந்த மாதம் நான் ராஜஸ்தான் செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது, இயக்குனர் லிங்குசாமியை சந்தித்தேன். அவரிடம் தமிழ்மணியைப் பற்றி விசாரித்தேன். அந்த பெயரைச் சொன்னவுடனே, லிங்குசாமியின் முகத்தில் ஒரு வெளிச்சம் பரவியது.

தமிழ்மணியைப் பற்றி சொல்வதென்றால்... ஒரு வார்த்தையில் மகிழ்ச்சி என்று சொல்லிவிடலாம். எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் அவர் உள்ளே, ஒரு மாபெரும் அழுகை மறைந்திருப்பதாக எனக்குத் தோன்றும்.

நான் அவரை முதன் முறையாக ஒரு கதை விவாதத்தில்தான் சந்தித்தேன். அவரும், 'ரன்' படத்தின் வசனகர்த்தா மோனா பழனிச்சாமியும் திரைக்கதையை வடிவமைத்து வைத்திருந்தார்கள். நான் "இந்த திரைக்கதையை குப்பையில் போட்டுவிட்டு, புதியதாக எழுதலாம்." என்றேன்.

தமிழ்மணிக்கு புதியதாக வந்த என்னை, என்ன செய்வதென்று புரியவில்லை. கோபமாக அறைக்குள் போனார். வெளியே வந்து தம் அடித்தார். சரக்கும் அடித்திருப்பார் என்று தோன்றியது.

கெஸ்ட் ஹவுசின் வராண்டாவில் கிடந்த மேஜையில் டிபன் தயாராக இருந்தது. மோனா பழனிச்சாமி லேசாக புன்னகைத்தபடி ¨முதல்ல சாப்பிடுங்க. அப்புறம் பேசலாம்.¨ என்றார்.

நான் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தேன்.

நேரம் கடந்த பின்னும் தமிழ்மணி அமைதியடைவதாக இல்லை. அவரின் கோபம் நியாயமானதுதான். பத்து நாள் உழைப்பை குப்பையில் போடு என்று சொன்னால் யார்தான் கோபப்படாமல் இருப்பார்கள்? எனக்கு எல்லாம் புரிகிறது. ஆனால்... தவறை ஏற்றுக்கொண்டால் அந்த திரைப்படம் தோல்வியை சந்திக்கும். அதற்கு நானும் பொறுப்பாவேன். அப்படி நடப்பதை நான் விரும்பவில்லை.

நான் அந்த திரைக்கதையில் உள்ள குறைபாடுகளை தெளிவாக பட்டியலிட்டு சொன்னேன். அடுத்த வினாடியே தமிழ்மணி சகஜமான நிலைக்கு வந்தார். அதுதான் உண்மையான அறிவாளியின் வலிமை. நாங்கள் புதிதாக திரைக்கதை அமைக்க ஆரம்பித்தோம். பிறகு தமிழ்மணி எனக்கு நல்ல நண்பராகிவிட்டார். அவரிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. அது, என்ன கேட்க வேண்டுமோ அதை நேருக்கு நேர் கேட்பார். நான் கிறிஸ்தவன் என்று அவருக்குத் தெரியும். ஆனாலும் "பரிசுத்த ஆவியில் இட்லி வேக வைக்க முடியுமா?" என்று கேட்டார். நானும் "முடியாது..." என்று சொல்லி சிரித்தேன். இப்படி யாரும் கேட்கமாட்டார்கள். நாகரீகம் என்ற பெயரில், எண்ணங்களை ஒளித்து வைத்துக்கொள்வார்கள்.

கலந்தாய்வு என்பது வேறு, வாக்குவாதம் என்பது வேறு. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருப்பதால், வாக்குவாதங்களால் முடிவுக்கு வரமுடியாது. அப்படியே வந்தாலும், அதுதான் முடிவு என்று சொல்லிவிட முடியாது. தமிழும், மோனாவும் வாக்குவாதங்களில் அடிக்கடி ஈடுபடுவார்கள். அப்படி சொல்வதைவிட, அவர்கள் இருக்கும் இடத்தில் வாக்குவாதமும் இருக்கும் என்று சொல்வதே சரியானது. ஆனாலும்... யுத்தத்திற்கு பிறகு அமைதியாகி போவார்கள். அவர்களுக்குள் எவ்வளவு மோதல் இருந்ததோ, அந்த அளவிற்கு அன்பும் இருந்தது. ஒருவரை ஒருவர் அற்புதமாக நேசித்தார்கள். சிறந்த நண்பர்கள்.

எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கிறது. அதை நாம் மறைத்து, பெரியவர்களாக காட்டிக்கொள்கிறோம். நம்மோடு வளராமல் குழந்தையாகவே நம் மனதில் ஒளிந்திருக்கும் அவனை அல்லது அவளை நாம் கைவிட்டுவிடுகிறோம். அந்த குழந்தை முக்கியத்துவம் பெறாமல் அனாதையாக தவிக்கிறது. தமிழ்மணியிடம் அந்த குறைபாடு இல்லை. அவர் மனதில் இருக்கும் சிறுவன்தான் நம்மிடம் பேசுவான், சிரிப்பான், விளையாடுவான், சண்டையிடுவான். அதனால் அவரை நம்மைவிட சிறந்தவர் என்றுதான் சொல்லவேண்டும்.

இரவுகளில் சந்தோஷமாக பாடுவார். அவரோடு நம்மையும் பாடச் சொல்வார். நமக்கு வரவில்லையென்றால், "நான் எந்த வார்த்தையில் முடிக்கிறேனோ அந்த வார்த்தையிலிருந்து ஒரு பாடலைச் சொல்லுங்கள்." என்று கேட்பார். ஒருவர் பாடலை முடிக்க, இன்னொருவர் அந்த வார்த்தையிலிருந்து துவங்க, அன்று இரவு முழுவதும் சந்தோஷமாக கழியும்.

அந்த கதை விவாதத்திற்குப் பிறகு பலமுறை நாங்கள் சந்தித்து பேசியிருக்கிறோம். திரைப்படம் குறித்தும், வாழ்க்கை குறித்தும் சீரியசாக பேசும் எங்கள் உரையாடல் எப்போதும் சிரிப்பில் முடிவடையும். அவர் இயக்குனர் லிங்குசாமியின் நண்பர் என்பதால் ஒரு முறை 'பையா' திரைப்படத்தின் டிக்கெட் தந்தார். நான் என் நண்பர்களோடு கமலா திரையரங்கில் படம் பார்த்தேன்.

எப்போதும் என்னை பார்த்தாலே தமிழ்மணி முகம் நிறைய சிரிப்போடு "ஸ்நேகிதன்..." என்று கத்துவார். ஒரு திரைக்கதையில் முரண்பட்டு, நண்பர்களான எங்கள் திரைக்கதையை கடவுள் எழுதி வைத்திருக்கிறார் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை.  நாங்கள் திரைக்கதை அமைத்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி, வெற்றியும் பெற்றது. ஆனால்... அதைப் பார்க்கத்தான் தமிழ்மணி இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த, ஒரு தீபாவளி தினத்தன்று பாத்ரூம் போன அவர் தவறி விழுந்து இறந்துபோனார்.

பண்டிகை நாட்களில் பிரம்மச்சாரிகள் தனித்துவிடப்படுவார்கள். சென்னையில் பெரும்பாலும் வெளியூர் ஆட்களே இருப்பதால், விழாக் காலங்களில் அவர்கள் சொந்த ஊருக்கு போய்விடுவார்கள். மட்டுமில்லாமல் தங்கள் உறவுகளோடு சந்தோஷமாக இருக்கும் அவர்கள், சென்னை நண்பர்களை மறந்துபோவதும் உண்டு. அப்படித்தான் தீபாவளி சந்தோஷத்தில் தமிழ்மணியை மறந்து போனோம்.

தீபாவளி முடிந்து மூன்று நாட்கள் கழித்து, தேடிப்போன ஒரு நண்பர்தான் தமிழ்மணி இறந்துபோனதை கண்டுபிடித்தார். அவர் உடனே இறந்து போனாரா அல்லது உதவி கிடைக்காமல் இறந்து போனாரா என்பது குறித்து தெரியவில்லை. எப்படியாக இருந்தாலும் தமிழ்மணியின் சிரிப்பு என் ஞாபத்தில் அப்படியே இருக்கிறது. நான் அவரை எடுத்த புகைப்படங்களைப் பார்த்தேன். ஒரு புகைப்படத்தில் கூட அவர் சோகமாக இல்லை. ஒரு சில புகைப்படத்தில் மட்டும் ஆப்ரகாம் லிங்கனைப் போல சிந்தனையில் இருந்தார். புகைப்படத்தில் இறக்காமல் இருக்கும் தமிழ்மணியை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கும், தோல்விக்கும் திரைக்கதையே முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த திரைக் கதையில் வரும் கதாபாத்திரம் இருப்பதற்கும், இறப்பதற்கும் காரணங்கள் உண்டு. ஆனால்... வாழ்க்கையில் தமிழ்மணியைப் போன்ற சிறந்த கதாபாத்திரங்கள் இறந்து போவதற்கு காரணங்கள் உண்டா என்று தெரியவில்லை.

அடையாளம் பெற வந்து - அதை பெறாமல் போய்விட்ட - அடையாளம் தெரியாத தமிழ்மணியை என் நினைவு கூறல் அடையாளப்படுத்தட்டும்.

தீபாவளி எல்லா வருடமும் வரும். அதுபோல தமிழ்மணியின் ஞாபகமும். 

Friday, 25 September 2015

மரணத்தின் நிறம்


மரணம் எப்போதும் தன்னை மர்மமாகத்தான் வைத்திருக்கிறது. அது எப்போது யாரை அழைத்துச் செல்லும் என்று யாருக்கும் தெரியாது. அது தெரிந்துவிட்டால், இந்த வாழ்கைக்கு எந்த சுவையும் இல்லை.

மரணத்தின் நிறம் என்ன? என்ற என் கேள்விக்கு கருப்பு, மஞ்சள், சிகப்பு, பிங்க் என்று நண்பர்கள் சொல்லிக்கொண்டே போனார்கள். அவர்கள் இன்னும் மரணத்தின் வாசலைத் தொட்டுத் திரும்பாதவர்கள். தொட்டுத் திரும்பியவர்கள்தான் உண்மையைச் சொல்ல முடியும். ஆனாலும்… மரணம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நிறமாக தோற்றம் அளிக்கக் கூடியதாக இருந்தால், அந்த உண்மையான நிறத்தையும் வெளியே சொல்ல முடியாது.

எப்படி இருந்தாலும்… நான் பார்த்த மரணம் வெள்ளை நிறமாக இருந்தது.

மழை லேசாக பெய்துகொண்டிருந்தது. கார் கன்னியாகுமரியிலிருந்து ஐந்து கிராமம் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்தது. நாங்கள் மூன்று பேர், உள்ளே சந்தோஷத்தின் எல்லையில் சிரித்துக்கொண்டிருந்தோம். நாளை எங்கள் மூவருக்குமே வெவ்வேறு வேலைகள் இருந்தது. ஆறுமுகத்திற்கு அவன் அப்பாவை மருத்துவமனை அழைத்துச் செல்லவேண்டும். பத்திரனுக்கு வெளிநாடு செல்வதற்கான ஆயத்தங்களை செய்ய வேண்டும். எனக்கு என் தோழியின் மகன் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

காருக்கு அடியிலிருந்து ஒரு சத்தம் கேட்டது. எங்கள் சிரிப்பு அடங்கிற்று. கார் காற்றில் பறந்து விழுந்தது. பிறகு துள்ளி மீண்டும் பறந்தது. மீண்டும் விழுந்தது. மறுபடியும் துள்ளி காற்றில் பறந்தது. அடுத்து விழுந்தது எனக்கு ஞாபகம் இல்லை.

நான் வெள்ளை நிற, வெளிச்சத்தின் உள்ளே செல்கிறேன். அங்கே அடையாளம் காணும்படி எதுவும் இல்லை. எல்லா பக்கமும் வெளிச்சமாகவே இருந்தது. நான் போய்கொண்டே இருந்தேன். எனக்கு இந்த வாழ்க்கை குறித்தோ, வந்த நண்பர்கள் குறித்தோ எந்த ஞாபகமும் இல்லை. மனம் எந்த உணர்வும் இல்லாமல் வெறுமையாக இருந்தது. எனக்கு இன்னும் உள்ளே போக வேண்டும் என்று தோன்றியது.

“ஸ்நேகிதன்… ஸ்நேகிதன்…” என்று யாரோ என் தோளைத் தொட்டு அசைத்தார்கள்.

நான் திரும்பிப் பார்த்தேன். பத்திரன் என் தோளை அசைத்துக்கொண்டிருந்தான். நான் காரிலிருந்து இறங்கினேன். என் கால்களில் இரத்தம் சிந்திக்கொண்டிருந்தது. சுற்றிலும் பார்த்தேன். இந்த உலகம் எனக்குப் புதியதாக இருந்தது. என்னோடு வந்த இருவரும் ஏதோ புரியாமல் நின்றுகொண்டிருந்தார்கள். நான் மூன்று நிமிடங்கள் சுயநினைவில்லாமல் இருந்ததாக பத்திரன் சொன்னான்.

கூட்டம் கூட ஆரம்பித்தது. அந்த இடம் பழவூர் சந்திப்பு என்று சொன்னார்கள். காரின் கீழ் பகுதி நொறுங்கிப்போயிருந்தது. இனி கார் எதற்கும் உதவாது.

இந்த விபத்திற்குப் பிறகு, பல மாதங்களாக நான் யாரோடும் பேசவில்லை. சூன்யம் என்பதன் பொருள் என்ன என்பதை என்னால் உணர முடிந்தது. அதனால்… வாழ்க்கையையும் புரிந்துகொள்ள முடிந்தது. என் மீது பகை கொண்ட நண்பர்கள்., நான் பகை வைத்திருக்கும் நண்பர்கள் என்று யாரும் இல்லாமல் போனார்கள். உடைந்துபோன என் ஃபோனை எடுத்து பேச முடியாததால், என் தம்பி ஒருவன் ‘இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.’ என்றான். அதற்கு நான் ‘சரி’ என்று பதிலளித்தேன்.

மரணத்தின் வெள்ளை நிறத்தை பார்க்காதவரைதான் இந்த உயிரும், பணமும், வீடும், பெண்ணும், புகழும் நம்முடையது. பார்த்தாகிவிட்டால் இங்கே எதுவுமே நம்முடையதல்ல.

பழவூர் சந்திப்பில் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், அங்கே மனிதர்களின் உயிரைக் குடிக்க நீலி ஒருத்தி நிற்பதாகவும் பலர் சொன்னார்கள்.

அதையெல்லாம் நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, இன்னொரு சந்தர்ப்பத்தில் அங்கே காத்திருக்கும் பழவூர் நீலியின் கதையை உங்களுக்கு சொல்கிறேன். அது நீங்கள் பார்க்காத ஒரு சினிமாவாக இருக்கும்.

Saturday, 28 December 2013

உண்மை உங்களை வரவேற்கிறது 2


தொலைபேசியின் ஒலி கதறிக்கொண்டே இருந்தது. மொத்தம் நாற்பது அழைப்புகள். அனைத்தையும் அவள் நிராகரித்தாள். எடுக்கப்படாத தொலைபேசி மணி ஒலிக்கும் வீட்டில், நாம் நேசிக்கிறவர்கள் இருந்தால்... அவர்கள் மேல் மோதிய ஒலி, நம்மை வந்தடைந்து அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பதை சொல்லிவிடுகிறது.

யார் முக்கியம் என்ற என் கேள்விக்கு, அவள் தன் தோழிகள்தான் என்பதை செயலால் சொல்லிவிட்டாள். நான் இந்த கேள்வியை முன் வைக்கவில்லையென்றால் எங்கள் உறவுக்கு உத்திரவாதம் இருந்திருக்கும். அந்த உத்திரவாதம் பொய்யானதாகவே இருந்திருக்கும். எல்லோரும் தேவையானவர்களுக்கு, யாரும் தேவையில்லை என்பதே உண்மை.

உண்மையை நோக்கி காதலியை அழைத்துச் சென்றதால், நான் தோற்றேன். அவள் ஜெயித்தாள். காதல் இறந்து போனது.

நான் புகைப்படம் எடுப்பதை நிறுத்தினேன். குடித்துவிட்டு ரோடுகளில் கிடந்தேன். அதை அவள் தோழிகள் பார்த்து சிரித்துவிட்டு போனார்கள்.

என் நண்பன் ஷாஜி தலையில் அடித்துக் கொண்டான். "நீ ஏஜென்சி பக்கமே போகல. உன் வேலை போயாச்சி. மதறாஸ்லயிருந்து வந்து இங்க பிச்சை எடுக்கப் போறியா?"

நான் அமைதியாக இருந்தேன். அவனுக்கு கோபம் இன்னும் அதிகமானது. பிறகு அதுவே என் மீது அன்பாக மாறியது. தாழ்ந்த குரலில் சொன்னான். "நீ தெருவுல கிடந்ததை உன் காதலி பார்த்திருக்கிறாள். நீ அழிந்து போவதைப் பற்றி, அவள் துளி கூட கவலைப்படவில்லை. இனியும் நீ உன்னை அழித்துக் கொள்ள விரும்புறியா?"

எனக்கு குடிக்க வேண்டும் போலிருந்தது.

மதுபானக் கூடத்தில் 'நூறு ஆண்டுகளுக்கு முன்பே உன் மீது எனக்கு காதல்...' என்ற பாடல் ஹிந்தியில் ஒலித்துக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு பெண் ஆடிக்கொண்டிருந்தாள். நான் குடித்துக் கொண்டிருந்தேன். அவள் நடனம் ஆடிக் கொண்டே அடிக்கடி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை எனக்குத் தெரியும். அவள் நடிகையாவதற்காக பாம்பே வந்தவள். நான் எடுத்த புகைப்படங்கள் அவளை நடிகையாக்கியிருந்தது. ஏனோ தெரியவில்லை அவள் சினிமாவில் ஜொலிக்கவில்லை. மதுபானக் கூடத்தில் ஆடிக்கொண்டிருந்தாள்.

என் அருகே வந்த அவள், மெதுவாகச் சொன்னாள். "நீ தெருவில் கிடப்பதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். அது நீதான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு விலை உயர்ந்த கேமரா தெருவில் கிடப்பதாகவே நான் நம்புகிறேன்."

நான் அவளை ஒரு வினாடி கூர்ந்து பார்த்தேன். அவள் கண்களில் உண்மை இருந்தது. எதுவும் சொல்லாமல் எழுந்தேன். வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

அன்றைய இரவு, நான் ஒரு கனவு கண்டேன். அதில் நானும் என் காதலியும் பைக்கில் சென்றுகொண்டிருந்தோம். கொஞ்ச தூரத்தில் 'உண்மை உங்களை வரவேற்கிறது' என்ற எல்லைக் கல்லைப் பார்த்தோம்.
அவள் வேகம் வேகமாக வண்டியை நிறுத்தச் சொன்னாள். நான் நிறுத்தவில்லை., அவள் குதித்தாள்.

நான் பதறிப் போய் பிரேக் அடித்தேன். பைக் அரை வட்டம் போட்டு நின்றது. அவளுக்கு என்ன ஆகியிருக்குமோ என்ற பதட்டத்தில் சுற்றிலும் பார்த்தேன்.

அவளை எங்கேயும் காணவில்லை. மறைந்து போயிருந்தாள்.

திரும்பிப் போய்விடலாம் என்ற எண்ணத்தில் பைக்கை ஸ்டார்ட் செய்தேன். ஆனால்... மனது எல்லையைக் கடக்க சொல்லிற்று. பைக்கை வேகமாக செலுத்தினேன். நான் எல்லையைத் தாண்டி நுழைந்த வினாடி... என் மீது அளவிடவே முடியாத வெளிச்சம் பாய்ந்தது. அங்கே பாதையும் இல்லை., பயணமும் இல்லை. எதுவுமற்ற நிலையே நிலைத்திருந்தது. என் நொறுங்கிப் போன மனம் மீண்டும் ஒன்றாக இணைந்து கொண்டது. அதில் பதிவாகியிருந்த கவலை, துக்கம், சந்தோஷம், காதல் எல்லாமும் அழிந்து போயிற்று.

மறுநாள் காலை. என் கேமராவை எடுத்துக்கொண்டு புகைப்படம் எடுக்க கிளம்பினேன். தெருவில் கிடந்த கேமராவை யாரோ ஒருவரின் வார்த்தை காப்பாற்றியிருக்கிறது. முக்கியமானவர்களுக்காக முக்கியமில்லாதவர்கள் கைவிடப்படுவார்கள். இவ்வளவுதான் உறவின் தத்துவம்.

எதிர் திசைகளில் பயணிக்கும் இரண்டு ஆன்மாக்கள் ஒருபோதும் இணைவதில்லை. இந்த இருபத்திமூன்று ஆண்டுகளில் நாங்கள் சந்திக்கவே இல்லை. யார் எங்கே இருக்கிறோம் என்று தெரியாது. உண்மையானவர்கள் உங்களை எல்லை நோக்கி அழைத்துச் செல்லும்படி வைக்க மாட்டார்கள். அப்படியே அழைத்தாலும் உங்கள் கூடவே வருவார்கள். அவர்களுக்கு உண்மையைப் பார்த்து பயமில்லை.

என்றாலும்... யாரையும் எல்லை நோக்கி அழைத்துச் செல்லாதீர்கள். அதற்கு அப்பால் உண்மை இருக்கிறது. உண்மை ஆபத்தானது., பொய் பாதுகாப்பானது.

Sunday, 22 December 2013

உண்மை உங்களை வரவேற்கிறது 1


யாரையும் எல்லையை நோக்கி அழைத்துச் செல்லாதீர்கள். அதற்கு அப்பால் உண்மை இருக்கிறது. உண்மை ஆபத்தானது.

உங்களுக்கு சிறந்த நண்பன் இருக்கலாம்., காதலி இருக்கலாம்., மனைவி இருக்கலாம்., பெற்றோர் இருக்கலாம்., குழந்தைகள் இருக்கலாம். யாராக இருந்தாலும் எல்லையை நோக்கி அழைத்துச் செல்லாதீர்கள். நீங்கள் உண்மையானவர் என்றால்... நொறுங்கிப் போவீர்கள்.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு பாம்பேயில் எனக்கொரு காதலி இருந்தாள். அவள் அழகானவள்., அமைதியானவள்., ஏன் உண்மையானவளும் கூட.

ஒரு மாலையில் நான் அவளைப் பார்ப்பதற்காக சர்ச் கேட் போய் இறங்கினேன். அப்போது சில பெண்கள் அவளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்களை நான் புகைப்படம் எடுக்கச் சென்ற பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர்களைக் குறித்து எனக்கு எந்த மரியாதையும் இல்லை. அதற்குப் பல மோசமான காரணங்கள் இருந்தது.

"அவர்களோடு உனக்கு நட்பு வேண்டாம்." என்றேன் என் காதலியிடம்.

அதற்கு அவள் ஏதேதோ கருத்துக்களையும், காரணங்களையும் சொன்னாள்.

கடைசியாக அவர்கள் நட்பைத் துண்டிக்க கால அவகாசம் கேட்டாள். நான் குழப்பமடைந்த இடம் இங்குதான். அவளுக்கு யார் முக்கியம்? என்ற கேள்வி தோன்றியது.

நாட்கள் நகர்ந்தது.

மட்டுங்கா ரயில் நிலையம் - என் காதலியோடு அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை மீண்டும் பார்த்தேன். என் காதலிக்கு யார் முக்கியம்?

"உனக்கு யார் முக்கியம்? நானா? உன் தோழிகளா?" என்று கேட்டேன்.

"நீங்கள்தான்." என்றாள்.

"அப்படியென்றால் அவர்கள் நட்பை விட்டு விடு."

"எனக்கு அவகாசம் வேண்டும்." இரண்டாவது முறையாக கேட்டாள். சில நேரங்களில்... ஒரு வினாடியில் எடுக்கப்படாத முடிவு, எப்போதுமே முடிவடையாது.

சொல்லாலும் செயலாலும் பின்னப்பட்டது வாழ்க்கை. சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பது உண்மை. சொல் வேறும், செயல் வேறுமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நான் அவளை எல்லைக்கு அப்பால் அழைத்துச் செல்ல முடிவு செய்தேன்.

தினமும் அவளிடம் "உன் தோழிகளை விட்டு எப்போது விலகுவாய்?" என்று கேட்க ஆரம்பித்தேன். தினம் ஒரு சண்டை. சண்டைக்கு நடுவே அவளை மெதுவாக எல்லையை நோக்கி அழைத்துச் சென்றேன்.

அவள் பாதி வழியில் நின்றுகொண்டாள். அதற்கு மேல் வரவில்லை. என்னோடு பேசுவதை குறைத்துக் கொண்டாள்.

எனக்கு புரிந்து போயிற்று. முக்கியமானது இருக்கும்., முக்கியமில்லாதது காணாமல் போகும். இங்கே காணாமல் போகப் போவது நானா? அவள் தோழிகளா?

ஒரு நடுப் பகலில் கடைசி சண்டை நிகழ்ந்தது. மறுநாள் அவள் வீட்டில்தான் இருந்தாள் என்பதை நான் அறிவேன். தொலைபேசியில் அழைத்தேன். அவள் எடுக்கவில்லை. இனி என் அழைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்று உள் மனம் சொல்லிற்று.

ஆனாலும்... கடைசியாக அந்த பொய்யான குரலைக் கேட்க விரும்பினேன். என் அழைப்பு அவள் வீட்டு தொலைபேசியில் ஒலித்துக் கொண்டிருந்தது...

அடுத்த வாரம்...

Saturday, 23 November 2013

திரும்பாத இரவுகள்


முன் கதவு திறந்திருக்கிறது
பின் கதவை பயன்படுத்த வேண்டாம்.

நண்பர்கள் போல
திருடர்கள் வருவதை
அனுமதிக்க முடியாது.

பிச்சைக்காரர்களுக்கும்
ஆதரவற்றவர்களுக்கும்
மேஜை மீது உணவிருக்கிறது.

மது அருந்துபவர்களுக்கு
குவளையில் சாராயமும்
இரண்டு கோப்பைகளும் இருக்கின்றன.

இளைப்பாற கட்டிலும் மெத்தையும்
மூலையில் கிடக்கின்றன.

சுவரிலிருக்கும் மனிதனை
இகழாதவரை
உறவுக்கு உத்திரவாதமுண்டு.

இரத்தக் கறை படிந்த புன்னகையை
மறக்காமல் எடுத்துக் கொண்டு
இரவு வருவதற்கு முன்
விடை பெறுங்கள்.

வீட்டைப் பூட்ட வேண்டும்.
                               - ஸ்நேகிதன்

Sunday, 17 November 2013

பார்வைகள்




அவனால் என்னை நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை. தலை குனிந்து கீழே பார்த்துக் கொண்டிருந்தான்.

நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

எங்களுக்கு நடுவே இரண்டு யூஸ் அண்ட் த்ரோ கப்புகளில் மது நிறைந்திருந்தது.

அவனுக்கும் குடிக்க மனதில்லை., எனக்கும். எதை வைத்து அவன் அப்படிச் சொன்னான் என்று என் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. நான் என்னை எப்படி வேண்டுமானாலும் மதிப்பிடலாம். ஆனால்... சமூகமும் அப்படியே மதிப்பிட வேண்டிய காட்டாமில்லை. அது வேறு மாதிரியான மதிப்பீட்டை வைத்திருக்கும்.

பல நல்லவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் இந்த சமூகம் மதிப்பீடு செய்துகொள்கிறது. அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமானால்... இந்த சமூகத்திற்காக நாம் சிறந்த நடிகர்களாக மாறியாக வேண்டும்.

நான் யூஸ் அண்ட் த்ரோ கப்பிலிருந்த மதுவை காலி செய்தேன். அவனுக்கு இன்னும் என்னை நேருக்கு நேர் பார்க்கும் துணிவு வரவில்லை. மூன்று நிமிடங்களுக்கு முன், "நீ ஒரு காரியவாதி." என்று அவன் என்னை பார்த்துச் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் மனதுக்குள் மோதிக்கொண்டே இருந்தது. நீண்ட ஆண்டுகள் பழகிய நண்பனே இப்படி ஒரு வார்த்தையைச் சொன்னான் என்றால்... இந்த சமூகம்?

"என்னப் பாரு." என்றேன்.

சில வினாடிகள் அவன் என்னைப் பார்க்கத் துணியவில்லை. பிறகு மெதுவாக தடுமாறும் கண்களோடு பார்த்தான்.

"உனக்குத் தெரியும் நான் அமைதியான ஆள் இல்லன்னு. அடுத்தவன் பிரச்சனைக்கு போயிப் போயியே என் வாழ்க்கய தொலைச்சிட்டேன். இப்ப காலம் அமைதியா இருக்க கத்துக் குடுத்துருக்கு. அமைதியா இருக்கிறேன். அமைதியா இருக்றவன் காரியவாதின்னா... அப்படியே இருந்துட்டு போட்டும்."

அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. மீண்டும் குனிந்து கொண்டான்.

"எங்கிட்ட பொண்டாட்டி இல்ல, குழந்தை இல்ல, சொந்த வீடு இல்ல, கார் இல்ல, பேங்ல பணமில்ல, ஏன்? சொல்லிக்ற மாதிரி வேலை கூட இல்ல. இதெல்லாம் வச்சிருக்ற நீ காரியவாதியா? நான் காரியவாதியா?" என்று கேட்டேன்.

அவன் அதற்கும் அமைதியாக இருந்தான். அமைதியை சிலர் இயல்பாக வைத்திருப்பார்கள். அவன் பதில் சொல்ல முடியாததால் வைத்திருந்தான். அடுத்த வினாடியே, அந்த இடத்தை விட்டு போகவேண்டும் போலிருந்தது. எனக்காக காத்திருந்த மதுக் கப்பை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

நடு இரவில் சென்னையின் தெரு அமைதியாக இருந்தது.

குடும்பத்திற்காக குடும்பத்திலிருந்து பிறக்கிறது குற்றம். அதில்தான் இந்த சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து மாறி நிற்பவன் துணிச்சலானவன். துணிவில்லாதவர்களால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கப்பை காலி செய்து கசக்கி தூக்கியெறிந்தேன். யூஸ் அண்ட் த்ரோ கப் போய் மண்ணில் விழுந்தது.