வரலாறு
நெடுக கனவு பற்றிய சம்பவங்கள் நிறைய உண்டு. எல்லா மதங்களிலும் கனவு பற்றிய சம்பவங்கள்
வருகின்றன. இதிகாசங்களிலும் கனவுகள் சிதறிக்கிடக்கின்றன. சிலப்பதிகாரதில் கண்ணகி ஒரு
கனவு கண்டாள். அதில் அவள் மீது வீண் பழி சுமத்தப்பட்டது. அதனால் கோவலனுக்கு பெரிய தீங்கு
உண்டானது. அவள் மன்னனிடம் நீதி கேட்டு மன்றாடினாள். அது அரசயையும் மக்களையும் அழித்தது.
பின்னால்
அது அப்படியே நடக்கிறது. கனவுகளில் பல வகைகள் இருந்தாலும்… முக்கியமாக, அடிக்கடி வரும்
கனவுகள் (Recurring Dreams), எதிர்காலத்தை உணர்த்தும் கனவுகள் (Prophetic Dreams),
தெளிவுநிலை கனவுகள் (Lucid Dreams), கொடுங் கனவுகள் (Nightmares), இதிகாசக் கனவுகள்
(Epic Dreams), நோய் தீர்க்கும் கனவுகள் (Healing Dreams), பொய் விழிப்பு கனவுகள்
(False Awakening Dreams), பகல் கனவுகள் என்று பல வகை உண்டு.
உளவியலின்
தந்தை சிக்மண்ட் பிராய்ட், ‘நாம் செய்யும் எந்த செயலும் தன்னிச்சையாக நடப்பதில்லை.
நம் அனைத்து எண்ணங்களையும், செயல்களையும் ஆழ்மனம் கட்டுப்படுத்துகிறது’ என்கிறார்.
எனவே ஒரு கனவை புரிந்துகொள்வதின் மூலம் ஒரு மனிதனை புரிந்துகொள்ள முடியும்.
அந்த
காலத்தில் கனவுகளுக்கு பலன் சொல்வதெற்கென்று திறமையானவர்கள் இருந்திருக்கிறார்கள். இப்போது அப்படி யாரும் இல்லை. கனவுகளுக்குப் பலன்
சொல்ல ஒரு கடை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இந்த கம்பியூட்டர் யுகத்தில் கனவுகளுக்கு
முக்கியத்துவம் கொடுப்பார்களா என்றும் தெரியவில்லை. சரி… விஷயத்துக்கு வருகிறேன்.
நான்
அதிகமாக கனவு காண்பதில்லை. அப்படியே கண்டாலும் மறந்துபோய்விடுகிறது. கடந்த ஆண்டு மார்ச்
மாத துவக்கத்தில் நான் கண்ட கனவு, இன்று வரை எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. அதற்குக்
காரணம் அந்த கனவு எனக்கு எதையோ சொல்ல வருகிறது என்று தோன்றிக் கொண்டே இருந்ததுதான்.
அந்த
கனவில், நான் அதிகாலையில் இல்லை இல்லை., அதை எந்த பொழுது என்று என்னால் சரியாக சொல்ல
முடியவில்லை. ஆனால் அது பகல்தான். நான் ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருக்கிறேன். யாரோ
என்னை பின்தொடர்வது போல தோன்றுகிறது. பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். மனம் உறைந்து
போகிறது. ஒரு சிங்கம் என்னை பின் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதன் கண்களில் என்னைக்
கொல்லும் வெறி தெரிகிறது. நான் வேகமாக ஓட ஆரம்பிக்கிறேன். அது துறத்துகிறது. நான் ஆற்றைக்
கடந்து தப்பிக்க நினைக்கிறேன். ஆனால்… ஆறு பள்ளத்தாக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. செங்குத்தான
பள்ளத்தில் இறங்கினால் சிங்கத்தால் பின் தொடர முடியாது என்ற எண்ணத்தில் இறங்குகிறேன்.
திரும்பி பார்க்கக் கூட அவகாசமில்லாமல் ஓடுகிறேன். அந்த ஓட்டம் கடினமானது என்றும் கடினமில்லாதது
போன்றும் தோன்றுகிறது. நான் ஆற்றில் இறங்கி வேகமாக நீந்துகிறேன். மறு கரையில் ஏறி திரும்பிப்
பார்க்கிறேன். சிங்கமும் வெறியோடு நீந்தி வந்துகொண்டிருக்கிறது. நான் மீண்டும் ஓட ஆரம்பிக்கிறேன்.
பள்ளத்தாக்கிலிருந்து
மேல் நோக்கி ஓடினால் சிங்கத்தால் ஏற முடியாது என்று தப்புக் கணக்கு போடுகிறேன். நான்
வேகமாக மேலே ஏறுகிறேன். விரைவாக சாலைக்கு வருகிறேன். அப்போது ஒருவன் பைக்கில் வருகிறான்.
அதில் பாய்ந்து ஏறுகிறேன். பின்னால் பார்த்தவாறு உட்காருகிறேன். சிங்கம் விடுவதாக இல்லை.
அதுவும் சாலைக்கு வந்து பைக்கை பின் தொடர்கிறது. எனக்கு உடல் சில்லிடுகிறது. பைக் ஓட்டுபவனின்
இதயத்துடிப்பு எனக்கு கேட்கிறது. நான் செல்ஃபோனை எடுத்து நண்பருக்கு தகவல் கொடுக்கிறேன்.
எப்படியோ எங்கள் பைக் ஊருக்குள் நுழைகிறது. விளையாட்டுக்கு சொல்கிறார்கள் என்று பேசிக்கொண்டிருந்த
ஊர் மக்கள் தெறித்து ஓடுகிறது.
நண்பர்
துப்பாக்கியில் மருந்தை போட்டு இடித்துக்கொண்டிருக்கிறார். பைக் அவர் அருகே செல்ல,
நான் அவரிடமிருந்து துப்பாக்கியை வாங்குகிறேன். சிங்கம் என் மீது பாய்ந்த வினாடி, துப்பாக்கி
வெடிக்கிறது. பைக் தடுமாறி கீழே விழுகிறது. நான் காற்றில் பறந்து நிற்க, சிங்கம் தரையில்
இறந்து கிடக்கிறது. ஊர் கூடி நின்று பார்க்கிறது. இவ்வளவுதான் என் கனவு.
இந்த
கனவுவை கடந்த ஆண்டு என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இந்த ஆண்டு அதற்கான விடை
கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் எனக்கு தரவேண்டிய பணத்தை ஒரு நமர் ஏமாற்ற
நினைத்திருக்கிறார். அதை இயற்கை எனக்கு கனவாக காட்டியிருக்கிறது. கனவை புரிந்துகொண்டு
கேட்டிருந்தால்… அப்போதே வாங்கியிருக்கலாம். அவர் சொன்ன வாக்கை நம்பிக்கொண்டிருந்ததில்தான்
பிரச்சனை. இனி கனவுதான் காட்சியாக மாறவேண்டும். சிங்கம் என்பது ஒரு நமரைக் குறிக்கிறது
என்பது தெளிவாகிவிட்டது.
துறத்துதல்,
பைக், வந்த நபர், துப்பாக்கி, நண்பர், சிங்கம் சாய்வது, ஊர் மக்கள் போன்றவற்றுக்கான
மறைபொருளை அடுத்து பார்க்கலாம்.
தொடரும்…
