Monday, 9 November 2015

தீபாவளி எல்லா வருடமும் வரும்

தமிழ்மணியும், மோனா பழனிச்சாமியும்

தீபாவளி வரும்போதெல்லாம் எனக்கு தமிழ்மணிதான் ஞாபகம் வருவார். தமிழ் சினிமாத் துறையில் லட்சியத்திற்காக திருமணம் செய்யாமல் இருக்கும் கூட்டத்தில் ஒருவராக அவரைச் சொல்லலாம். அவர் எல்லோருக்குமே பிரியமான மனிதர் என்று நினைக்கிறேன். கடந்த மாதம் நான் ராஜஸ்தான் செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது, இயக்குனர் லிங்குசாமியை சந்தித்தேன். அவரிடம் தமிழ்மணியைப் பற்றி விசாரித்தேன். அந்த பெயரைச் சொன்னவுடனே, லிங்குசாமியின் முகத்தில் ஒரு வெளிச்சம் பரவியது.

தமிழ்மணியைப் பற்றி சொல்வதென்றால்... ஒரு வார்த்தையில் மகிழ்ச்சி என்று சொல்லிவிடலாம். எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் அவர் உள்ளே, ஒரு மாபெரும் அழுகை மறைந்திருப்பதாக எனக்குத் தோன்றும்.

நான் அவரை முதன் முறையாக ஒரு கதை விவாதத்தில்தான் சந்தித்தேன். அவரும், 'ரன்' படத்தின் வசனகர்த்தா மோனா பழனிச்சாமியும் திரைக்கதையை வடிவமைத்து வைத்திருந்தார்கள். நான் "இந்த திரைக்கதையை குப்பையில் போட்டுவிட்டு, புதியதாக எழுதலாம்." என்றேன்.

தமிழ்மணிக்கு புதியதாக வந்த என்னை, என்ன செய்வதென்று புரியவில்லை. கோபமாக அறைக்குள் போனார். வெளியே வந்து தம் அடித்தார். சரக்கும் அடித்திருப்பார் என்று தோன்றியது.

கெஸ்ட் ஹவுசின் வராண்டாவில் கிடந்த மேஜையில் டிபன் தயாராக இருந்தது. மோனா பழனிச்சாமி லேசாக புன்னகைத்தபடி ¨முதல்ல சாப்பிடுங்க. அப்புறம் பேசலாம்.¨ என்றார்.

நான் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தேன்.

நேரம் கடந்த பின்னும் தமிழ்மணி அமைதியடைவதாக இல்லை. அவரின் கோபம் நியாயமானதுதான். பத்து நாள் உழைப்பை குப்பையில் போடு என்று சொன்னால் யார்தான் கோபப்படாமல் இருப்பார்கள்? எனக்கு எல்லாம் புரிகிறது. ஆனால்... தவறை ஏற்றுக்கொண்டால் அந்த திரைப்படம் தோல்வியை சந்திக்கும். அதற்கு நானும் பொறுப்பாவேன். அப்படி நடப்பதை நான் விரும்பவில்லை.

நான் அந்த திரைக்கதையில் உள்ள குறைபாடுகளை தெளிவாக பட்டியலிட்டு சொன்னேன். அடுத்த வினாடியே தமிழ்மணி சகஜமான நிலைக்கு வந்தார். அதுதான் உண்மையான அறிவாளியின் வலிமை. நாங்கள் புதிதாக திரைக்கதை அமைக்க ஆரம்பித்தோம். பிறகு தமிழ்மணி எனக்கு நல்ல நண்பராகிவிட்டார். அவரிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. அது, என்ன கேட்க வேண்டுமோ அதை நேருக்கு நேர் கேட்பார். நான் கிறிஸ்தவன் என்று அவருக்குத் தெரியும். ஆனாலும் "பரிசுத்த ஆவியில் இட்லி வேக வைக்க முடியுமா?" என்று கேட்டார். நானும் "முடியாது..." என்று சொல்லி சிரித்தேன். இப்படி யாரும் கேட்கமாட்டார்கள். நாகரீகம் என்ற பெயரில், எண்ணங்களை ஒளித்து வைத்துக்கொள்வார்கள்.

கலந்தாய்வு என்பது வேறு, வாக்குவாதம் என்பது வேறு. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருப்பதால், வாக்குவாதங்களால் முடிவுக்கு வரமுடியாது. அப்படியே வந்தாலும், அதுதான் முடிவு என்று சொல்லிவிட முடியாது. தமிழும், மோனாவும் வாக்குவாதங்களில் அடிக்கடி ஈடுபடுவார்கள். அப்படி சொல்வதைவிட, அவர்கள் இருக்கும் இடத்தில் வாக்குவாதமும் இருக்கும் என்று சொல்வதே சரியானது. ஆனாலும்... யுத்தத்திற்கு பிறகு அமைதியாகி போவார்கள். அவர்களுக்குள் எவ்வளவு மோதல் இருந்ததோ, அந்த அளவிற்கு அன்பும் இருந்தது. ஒருவரை ஒருவர் அற்புதமாக நேசித்தார்கள். சிறந்த நண்பர்கள்.

எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கிறது. அதை நாம் மறைத்து, பெரியவர்களாக காட்டிக்கொள்கிறோம். நம்மோடு வளராமல் குழந்தையாகவே நம் மனதில் ஒளிந்திருக்கும் அவனை அல்லது அவளை நாம் கைவிட்டுவிடுகிறோம். அந்த குழந்தை முக்கியத்துவம் பெறாமல் அனாதையாக தவிக்கிறது. தமிழ்மணியிடம் அந்த குறைபாடு இல்லை. அவர் மனதில் இருக்கும் சிறுவன்தான் நம்மிடம் பேசுவான், சிரிப்பான், விளையாடுவான், சண்டையிடுவான். அதனால் அவரை நம்மைவிட சிறந்தவர் என்றுதான் சொல்லவேண்டும்.

இரவுகளில் சந்தோஷமாக பாடுவார். அவரோடு நம்மையும் பாடச் சொல்வார். நமக்கு வரவில்லையென்றால், "நான் எந்த வார்த்தையில் முடிக்கிறேனோ அந்த வார்த்தையிலிருந்து ஒரு பாடலைச் சொல்லுங்கள்." என்று கேட்பார். ஒருவர் பாடலை முடிக்க, இன்னொருவர் அந்த வார்த்தையிலிருந்து துவங்க, அன்று இரவு முழுவதும் சந்தோஷமாக கழியும்.

அந்த கதை விவாதத்திற்குப் பிறகு பலமுறை நாங்கள் சந்தித்து பேசியிருக்கிறோம். திரைப்படம் குறித்தும், வாழ்க்கை குறித்தும் சீரியசாக பேசும் எங்கள் உரையாடல் எப்போதும் சிரிப்பில் முடிவடையும். அவர் இயக்குனர் லிங்குசாமியின் நண்பர் என்பதால் ஒரு முறை 'பையா' திரைப்படத்தின் டிக்கெட் தந்தார். நான் என் நண்பர்களோடு கமலா திரையரங்கில் படம் பார்த்தேன்.

எப்போதும் என்னை பார்த்தாலே தமிழ்மணி முகம் நிறைய சிரிப்போடு "ஸ்நேகிதன்..." என்று கத்துவார். ஒரு திரைக்கதையில் முரண்பட்டு, நண்பர்களான எங்கள் திரைக்கதையை கடவுள் எழுதி வைத்திருக்கிறார் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை.  நாங்கள் திரைக்கதை அமைத்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி, வெற்றியும் பெற்றது. ஆனால்... அதைப் பார்க்கத்தான் தமிழ்மணி இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த, ஒரு தீபாவளி தினத்தன்று பாத்ரூம் போன அவர் தவறி விழுந்து இறந்துபோனார்.

பண்டிகை நாட்களில் பிரம்மச்சாரிகள் தனித்துவிடப்படுவார்கள். சென்னையில் பெரும்பாலும் வெளியூர் ஆட்களே இருப்பதால், விழாக் காலங்களில் அவர்கள் சொந்த ஊருக்கு போய்விடுவார்கள். மட்டுமில்லாமல் தங்கள் உறவுகளோடு சந்தோஷமாக இருக்கும் அவர்கள், சென்னை நண்பர்களை மறந்துபோவதும் உண்டு. அப்படித்தான் தீபாவளி சந்தோஷத்தில் தமிழ்மணியை மறந்து போனோம்.

தீபாவளி முடிந்து மூன்று நாட்கள் கழித்து, தேடிப்போன ஒரு நண்பர்தான் தமிழ்மணி இறந்துபோனதை கண்டுபிடித்தார். அவர் உடனே இறந்து போனாரா அல்லது உதவி கிடைக்காமல் இறந்து போனாரா என்பது குறித்து தெரியவில்லை. எப்படியாக இருந்தாலும் தமிழ்மணியின் சிரிப்பு என் ஞாபத்தில் அப்படியே இருக்கிறது. நான் அவரை எடுத்த புகைப்படங்களைப் பார்த்தேன். ஒரு புகைப்படத்தில் கூட அவர் சோகமாக இல்லை. ஒரு சில புகைப்படத்தில் மட்டும் ஆப்ரகாம் லிங்கனைப் போல சிந்தனையில் இருந்தார். புகைப்படத்தில் இறக்காமல் இருக்கும் தமிழ்மணியை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கும், தோல்விக்கும் திரைக்கதையே முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த திரைக் கதையில் வரும் கதாபாத்திரம் இருப்பதற்கும், இறப்பதற்கும் காரணங்கள் உண்டு. ஆனால்... வாழ்க்கையில் தமிழ்மணியைப் போன்ற சிறந்த கதாபாத்திரங்கள் இறந்து போவதற்கு காரணங்கள் உண்டா என்று தெரியவில்லை.

அடையாளம் பெற வந்து - அதை பெறாமல் போய்விட்ட - அடையாளம் தெரியாத தமிழ்மணியை என் நினைவு கூறல் அடையாளப்படுத்தட்டும்.

தீபாவளி எல்லா வருடமும் வரும். அதுபோல தமிழ்மணியின் ஞாபகமும். 

Friday, 25 September 2015

மரணத்தின் நிறம்


மரணம் எப்போதும் தன்னை மர்மமாகத்தான் வைத்திருக்கிறது. அது எப்போது யாரை அழைத்துச் செல்லும் என்று யாருக்கும் தெரியாது. அது தெரிந்துவிட்டால், இந்த வாழ்கைக்கு எந்த சுவையும் இல்லை.

மரணத்தின் நிறம் என்ன? என்ற என் கேள்விக்கு கருப்பு, மஞ்சள், சிகப்பு, பிங்க் என்று நண்பர்கள் சொல்லிக்கொண்டே போனார்கள். அவர்கள் இன்னும் மரணத்தின் வாசலைத் தொட்டுத் திரும்பாதவர்கள். தொட்டுத் திரும்பியவர்கள்தான் உண்மையைச் சொல்ல முடியும். ஆனாலும்… மரணம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நிறமாக தோற்றம் அளிக்கக் கூடியதாக இருந்தால், அந்த உண்மையான நிறத்தையும் வெளியே சொல்ல முடியாது.

எப்படி இருந்தாலும்… நான் பார்த்த மரணம் வெள்ளை நிறமாக இருந்தது.

மழை லேசாக பெய்துகொண்டிருந்தது. கார் கன்னியாகுமரியிலிருந்து ஐந்து கிராமம் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்தது. நாங்கள் மூன்று பேர், உள்ளே சந்தோஷத்தின் எல்லையில் சிரித்துக்கொண்டிருந்தோம். நாளை எங்கள் மூவருக்குமே வெவ்வேறு வேலைகள் இருந்தது. ஆறுமுகத்திற்கு அவன் அப்பாவை மருத்துவமனை அழைத்துச் செல்லவேண்டும். பத்திரனுக்கு வெளிநாடு செல்வதற்கான ஆயத்தங்களை செய்ய வேண்டும். எனக்கு என் தோழியின் மகன் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

காருக்கு அடியிலிருந்து ஒரு சத்தம் கேட்டது. எங்கள் சிரிப்பு அடங்கிற்று. கார் காற்றில் பறந்து விழுந்தது. பிறகு துள்ளி மீண்டும் பறந்தது. மீண்டும் விழுந்தது. மறுபடியும் துள்ளி காற்றில் பறந்தது. அடுத்து விழுந்தது எனக்கு ஞாபகம் இல்லை.

நான் வெள்ளை நிற, வெளிச்சத்தின் உள்ளே செல்கிறேன். அங்கே அடையாளம் காணும்படி எதுவும் இல்லை. எல்லா பக்கமும் வெளிச்சமாகவே இருந்தது. நான் போய்கொண்டே இருந்தேன். எனக்கு இந்த வாழ்க்கை குறித்தோ, வந்த நண்பர்கள் குறித்தோ எந்த ஞாபகமும் இல்லை. மனம் எந்த உணர்வும் இல்லாமல் வெறுமையாக இருந்தது. எனக்கு இன்னும் உள்ளே போக வேண்டும் என்று தோன்றியது.

“ஸ்நேகிதன்… ஸ்நேகிதன்…” என்று யாரோ என் தோளைத் தொட்டு அசைத்தார்கள்.

நான் திரும்பிப் பார்த்தேன். பத்திரன் என் தோளை அசைத்துக்கொண்டிருந்தான். நான் காரிலிருந்து இறங்கினேன். என் கால்களில் இரத்தம் சிந்திக்கொண்டிருந்தது. சுற்றிலும் பார்த்தேன். இந்த உலகம் எனக்குப் புதியதாக இருந்தது. என்னோடு வந்த இருவரும் ஏதோ புரியாமல் நின்றுகொண்டிருந்தார்கள். நான் மூன்று நிமிடங்கள் சுயநினைவில்லாமல் இருந்ததாக பத்திரன் சொன்னான்.

கூட்டம் கூட ஆரம்பித்தது. அந்த இடம் பழவூர் சந்திப்பு என்று சொன்னார்கள். காரின் கீழ் பகுதி நொறுங்கிப்போயிருந்தது. இனி கார் எதற்கும் உதவாது.

இந்த விபத்திற்குப் பிறகு, பல மாதங்களாக நான் யாரோடும் பேசவில்லை. சூன்யம் என்பதன் பொருள் என்ன என்பதை என்னால் உணர முடிந்தது. அதனால்… வாழ்க்கையையும் புரிந்துகொள்ள முடிந்தது. என் மீது பகை கொண்ட நண்பர்கள்., நான் பகை வைத்திருக்கும் நண்பர்கள் என்று யாரும் இல்லாமல் போனார்கள். உடைந்துபோன என் ஃபோனை எடுத்து பேச முடியாததால், என் தம்பி ஒருவன் ‘இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.’ என்றான். அதற்கு நான் ‘சரி’ என்று பதிலளித்தேன்.

மரணத்தின் வெள்ளை நிறத்தை பார்க்காதவரைதான் இந்த உயிரும், பணமும், வீடும், பெண்ணும், புகழும் நம்முடையது. பார்த்தாகிவிட்டால் இங்கே எதுவுமே நம்முடையதல்ல.

பழவூர் சந்திப்பில் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், அங்கே மனிதர்களின் உயிரைக் குடிக்க நீலி ஒருத்தி நிற்பதாகவும் பலர் சொன்னார்கள்.

அதையெல்லாம் நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, இன்னொரு சந்தர்ப்பத்தில் அங்கே காத்திருக்கும் பழவூர் நீலியின் கதையை உங்களுக்கு சொல்கிறேன். அது நீங்கள் பார்க்காத ஒரு சினிமாவாக இருக்கும்.