இனிய நண்பர்களே...
எனக்கு உங்கள் முகம் தெரியாது., பெயர் தெரியாது. நண்பனுக்கு ஒரு முகமும் பெயரும் தேவைதான். ஆனால்... நட்பு என்ற உணர்வுக்குத் தேவையில்லை. அந்த உணர்வோடு உங்களிடம் பேச வருகிறேன்.
ஒரு புகைப்படம் உங்கள் வாழ்வை சொல்லக் கூடும். அதனால்... கேமராவின் முன்னிருந்து விலகிச் செல்லாமலிருப்பது சிறப்பு.
நீங்கள் டீ குடிக்கும் நேரத்தில், உணவுக்கு காத்திருக்கும் நேரத்தில் அல்லது பஸ்சுக்காக காத்திருக்கும் நேரத்தில் நாம் பேசிக்கொள்ளலாம். என்னோடு பேச நீங்கள் நேரம் ஒதுக்கினாலும் மகிழ்ச்சிதான்.
நான் ஸ்நேகிதன்., புகைப்படக் கவிஞன். நான் என் கேமராவின் வழியாகப் பார்த்த மனிதர்கள், காட்சிகள், கவிதைகள், கதைகள் என்று எல்லாவற்றையும் உங்களோடு பேசப் போகிறேன். நீங்களும் பேசலாம்.
கேமராவுக்கு எதுவும் தெரியாது. அது நாம் சொல்வதைச் செய்கிறது., அவ்வளவுதான். ஒளியோடு பேசத் தெரிந்தவன் மட்டுமே சிறந்த புகைப்படக் கலைஞன். ஒளியின் மொழி, ஒளியில் ஒளிந்திருக்கிறது.
நாம் அறிந்த மனிதர்களைப் பற்றியே அறிந்து கொள்ள விரும்புகிறோம். அறியாத மனிதர்களிடமும் கதை இருக்கிறது. அவர்கள் எழுதுவதில்லை. அதனால்... யாரும் அறிந்துகொள்ள முடிவதில்லை.
மனிதனாக பிறந்துவிட்டாலே அவனோடு கதையும் பிறக்கிறது. அவனும் ஒரு எழுத்தாளன்தான். ஒவ்வொரு மனிதனிடமும் எண்ணற்ற கதைகள் நிறைந்து கிடக்கிறது. ஒரு சிலர் எழுதுகிறார்கள். பலர் எழுதப்படாத கதைகளை சுமந்து திரிகிறார்கள்.
நாம் கதைகளை இழந்து கொண்டிருக்கிறோம். அதை காப்பாற்றாத சமூகம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் இழக்கும். கதை கடந்து போனவைகளைச் சொல்கிறது. நடந்து கொண்டிருப்பதைச் சொல்கிறது. ஒரு ஆச்சரியம் என்னவென்றால்... அது நடக்கப் போவதையும் சொல்கிறது. முன்னோர்களின் கதையறியாத குடும்பம் கௌவரவத்தை அறிந்து கொள்வதில்லை.
கதை மனிதர்களை இணைக்கிறது., நண்பர்களாக்குகிறது. அவர்களும் கதையாக மாறுகிறார்கள். நாமும் ஒரு கதையாக மாறலாம்.
அன்புடன் ஸ்நேகிதன்
